search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்காளபரமேஸ்வரி"

    • ஆன்மாக்களுக்கு அதிதேவதை அங்காளி ஆகும்.
    • அங்காளபரமேசுவரியை மனதில் நினைத்தாலே அவள் வந்து துன்பத்தை தீர்த்து வைப்பாள்.

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வமாவாள். தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமை அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு சென்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் அதாவது சனி ஓரையில், 18 எலுமிச்சம்பழங்களால் ஆன மாலையிட்டு, 9 எலுமிச்சம்பழங்களை இரண்டாக வெட்டி மஞ்சள் குங்குமம் இட்டு, 18 தீபமிட்டு வழிபட்டு வந்தால், தோல்வியைத் தரும் தோஷம் விலகி ஓடி விடும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். நினைத்த காரியம் கைகூடும்.

    இந்த பரிகார பூஜை செய்யும் போது தீபமேற்றி அங்காள பரமேஸ்வரி தாயே! எனக்கு வெற்றியை நீ மட்டுமே தர முடியும். என் வாழ்வில் ஒளியேற்று!' என மனமுருகி வேண்டி கொள்ள வேண்டும்.

    தோஷம் போக்கும் அங்கபிரதட்சணம்

    குடும்பத்தில் குழப்பம், நோய், நொடிகள், பேய் பிசாசு, பில்லி,சூன்யம், வைப்பு, ஏவல், காட்டேரி போன்ற பிணிகள் பிடித்து இருந்தால் மேல்மலையனூர் அங்காளபரமேசுவரியை மனதில் நினைத்தாலே போதும், அவள் வந்து துன்பத்தைத் தீர்த்து வைப்பாள். பொதுவாக எந்த பாதிப்பு வந்தாலும் அம்மா தாயே எங்கள் குடும்ப கஷ்டங்கள், தொல்லைகள், துயரங்கள் போன்றவற்றை எல்லாம் விலக்கி விடு என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.

    அங்கப்பிரதட்சணம் செய்வது அங்காள பரமேசுவரிக்கு மிகவும் பிடித்த நேர்த்திக் கடனாகும். இந்த உலகில் உள்ள ஆன்மாக்களுக்கு எல்லாம் அதி தேவதையாக விளங்கும் தலைமைத் தாய் அங்காளி ஆகும். அந்த அங்காளி மனிதப் பிறவிகள் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களைப் பற்றிக் கொண்டு ஆட்டுதாகவும் கருதப்படுகிறது.

    ஆன்மாவானது பற்றிக் கொண்ட மனிதன் என்ற பூத உடலை விட்டு விலகி மீண்டும் அம்மனுடைய கோவிலில் அம்மனுடைய சக்தி சொரூபத்தை சென்று அடைய வேண்டும் என்பதை கருதியே அங்கபிரதட்சணம் என்ற பிரார்த்தனை செய்யப்படுகிறது.

    மனிதன் செய்த பாவ எண்ணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக்கூடும். இந்த பாவச்சுமையை பக்தர்கள் உடனுக்குடன் இறக்கி வைத்து விட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அங்க பிரதட்சணமாக தன்னைத்தானே சுற்றிக் கொண்டு கோயிலையும் சுற்றி வருவதால் அப்பாவ செயல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிடும். மேலும் கோவிலை சுற்றி வலம் வரும் போது அந்த பாவங்கள் அனைத்தும் அறவே நீங்கி விடுவதாக கருதப்படுகிறது.

    அங்க அவயம் என்பது எட்டு உறுப்புகள் கொண்ட தொகுப்பாகும். தலை, நெற்றி, கரங்கள், தோள்பட்டைகள், மார்பு, வயிறு, கால் முட்டிகள், பாத விரல்கள் ஆகியவை அங்க அவயங்களாகும். இவையாவுமே அம்மன் திருக்கோயில் வளாகத்தில் பூமியில் படும்படியாக நமஸ்காரம் செய்வதே அங்க பிரதட்சணம் என்பதாகும்.

    பலி பீடத்திற்கு எதிராக உடலை தூய்மையாக்கி குளித்து ஈரத்துணியுடன் கிழக்கு நோக்கி தரையில் உருண்ட வண்ணம், மீண்டும் மேற்குப் பக்கமாக வந்து பலி பீடத்தின் முன்பாகவே பிரார்த்தனையை முடித்து எழுந்து மீண்டும் குளித்து தூய ஆடை உடுத்தி அம்மன் கோவில் உள்ளே சென்று அம்மன் புற்றை வலம் வந்த வண்ணம் மூலவரை தரிசிக்க வேண்டும் பிறகு காணிக்கையை உண்டியலில் செலுத்தி வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

    அங்க பிரதட்சனை வழிபாடு செய்வதால் ஜீவ ஆத்மாக்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோஷங்கள், பில்லி, ஏவல், வைப்பு, காட்டேரி, சூன்யங்கள் யாவும் அம்மன் அருளால் தானாக விலகிச் செல்வதாக கருதப்படுகிறது.

    அங்கப்பிரதட்சனம் சுற்றி வரும் பக்தர்கள் அம்மன் நினைவை தவிர வேறு சிந்தனையை மனதில் வைக்கக்கூடாது. அங்காள பரமேசுவரி மீது பாரத்தை போட்டு விட்டு பிரதட்சணம் செய்ய வேண்டும். அங்க பிரதட்சணத்தின் மகிமையை உணர்ந்தவர்கள் மேல்மலையனூர் தலத்தில் அதை செய்ய தவறுவதில்லை.

    ×