search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yercaud Hill Road"

    தொடர் மழை மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையினால் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. பின்பு அது சரிசெய்யப்பட்டு 4 நாட்களுக்கு பின்னர் போக்குவரத்து தொடங்கியது.

    கனரக வாகனங்கள் மற்றொரு மலைப்பாதையான குப்பனூர் பாதையில் சென்று வந்தன. கடந்த வாரம் இந்த பாதையிலும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த வழியாகவும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மற்ற வாகனங்கள் மட்டும் சென்று வந்தன.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஏற்காட்டில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. மேலும் கொண்டயனூர் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு மரம் வேரோடு சாய்ந்தது. இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் கொண்டயனூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் மஞ்சகுட்டை, செம்மநத்தம் ஆகிய பகுதிகளில் மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதைப்போல் ஏற்காடு மலைப்பகுதியில் மின்கம்பிகள் மீது மரம் விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரம் ஏற்காடு முழுவதும் இருளில் மூழ்கியது. ஏற்காடு பஞ்சாயத்து அலுவலகத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு ஏற்காடு-சேலம் மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே ராட்சத பாறைகள் உருண்டு வந்து விழுந்தன. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் ராஜசேகர் மற்றும் சாலை ஆய்வாளர் ரமேஷ் உள்பட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பொக்லைன் எந்திரத்தை கொண்டு, போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து தொடங்கியது. எனினும் ராட்சத பாறைகளை உடனடியாக அகற்ற முடியவில்லை. இதையடுத்து இன்று காலை கம்பரசர் கொண்டு கற்கள் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டன.

    வழக்கமாக ஏற்காட்டுக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். வெள்ளிக்கிழமை மாலையே ஏற்காட்டில் குவியும் மக்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு தங்கி இருந்து இயற்கையை ரசிப்பார்கள்.

    தொடர் மழை மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால் ஏற்காட்டில் உள்ள கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் தொடர் மழையால் ஏற்காட்டில் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
    ×