என் மலர்
நீங்கள் தேடியது "Woman councilor who tried to set fire"
- ஓமலூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
- அ.தி.மு.க. உறுப்பினர்கள் தீர்மானத்தில் கையெழுத்திட்டதால் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓமலூர்:
ஓமலூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் செல்வி ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 18-வது வார்டு த.மா.கா. உறுப்பினர் பாப்பா சின்னையன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பச்சனம்பட்டியில் உள்ள நூலக நிலத்தை மீட்க 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், ஒன்றிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணையாக இருப்பதாக கூறினார்.
அதேபோல ஒரு தனி நபர் எந்தவித அனுமதியும் இல்லாமல் ஜல் ஜீவன் பைப்லைனில் மோட்டார் வைத்து தண்ணீர் உருஞ்சுகிறார். தனிப்பட்ட முறையில் அவரே பைப்லைன் போட்டுள்ளார். இதற்கும் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். இதற்கு அதிகாரிகள் தரப்பில் முறையான நடவடிக்கை இல்லை என்றார்.
அப்போது திடீரென அவர் பையில் எடுத்து வந்த மண்ணெண்ணையை கூட்ட அரங்கிலேயே உடலில் ஊற்றி கொண்டு தீக் குளிக்க முயன்றார். இதனால், மன்ற கூட்டத்தில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ஊழியர்கள் த்ண்ணீரை அவர் மீது ஊற்றினர். தொடர்ந்து அதிகாரிகள் கவுன்சிலர் பாப்பாவின் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஆனால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, உறுப்பினர் பாப்பா, அவரது கணவர் சின்னையன் ஆகியோர் ஒன்றிய அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாப்பாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், ஓமலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விட கூடுதலாக தங்களுக்கு தேவையான தீர்மானத்தை பொய்யாக ஒட்டி பல மோசடி வேலைகளை அதிகாரிகள் செய்துள்ளனர். அதனால், கடந்த கால தீர்மான நகல்களை வழங்க வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், 100நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அதேபோல பட்டா இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் அரசு வீடுகள் கட்ட ஊராட்சி தலைவர்கள் அனுமதி வழங்கி வீடுகள் கட்டி வருகின்றனர். அதிகாரிளும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு துணையாக உள்ளதாக புகார் தெரிவித்தனர்.
அதனால் கூட்டத்தில் எந்தவித தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது, கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். தீர்மான நகல்களை வழங்கிய பின்னர் முறையாக கூட்டம் நடத்தலாம் என்று கூறி கூட்டத்தை புறக்கணித்து சென்றனர். அ.தி.மு.க. உறுப்பினர்கள் தீர்மானத்தில் கையெழுத்திட்டதால் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






