search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "week market"

    பெரம்பலூர் வாரச்சந்தையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கொட்டகைகள் நேற்று திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் நாசமாயின.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலையோரத்தில் உழவர் சந்தை அருகே வாரச்சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். இதில் வியாபாரிகள் கீற்று கொட்டகை அமைத்து, அதில் தக்காளி, வெங்காய கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்டவையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் அந்த வாரச்சந்தையில் உள்ள ஒரு கீற்று கொட்டகை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் தீயை அணைப்பதற்காக வீட்டில் இருந்து தண்ணீரை எடுத்து ஓடி வந்தனர்.

    ஆனால் அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைப்பதற்குள், அருகில் உள்ள கொட்டகைகளுக்கும் தீ மள, மளவென பரவியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கொட்டகைகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து வாரச்சந்தை கொட்டகைகளில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனால் அந்த கொட்டகைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. நேற்று வாரச்சந்தை இல்லாததால் அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை. கொட்டகையில் எப்படி தீ பிடித்தது? யாரும் அந்த கொட்டைகையில் அமர்ந்து பீடி அல்லது சிகரெட் புகைத்து விட்டு, அணைக்காமல் போட்டு சென்றதால் தீ பிடித்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பெரம்பலூர் வடக்குமாதேவியில் ராஜூ என்பவருக்கு சொந்தமான சோளக்காட்டில் தீப்பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×