search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vallalar Arul House"

    • வள்ளலார் அருள் மாளிகை தனிநபர் ஒருவரின் கைவசம் இருந்து வந்தது.
    • வள்ளலார் மாளிகை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் - புதுவை சாலையில் வள்ளலார் அருள் மாளிகை உள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக அறக்கட்டளையின் சார்பில் தொடங்கப்பட்டது. அதுமுதல் இங்கு அன்னதானமும், சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் இங்கு ஜோதி வழிபாடும், தைப்பூச தினத்தில் சிறப்பு ஜோதி தரிசனமும் நடைபெறும்.

    சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த வள்ளலார் அருள் மாளிகை தனிநபர் ஒருவரின் கைவசம் வந்தது. பூஜை, வழிபாடு மற்றும் அன்னதானங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில் அருள் மாளிகை தொடர்பாக பல்வேறு புகார்கள் இந்து அறநிலையத் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் சென்றது. இந்நிலையில் இந்து அறநிலையத் துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில் உதவி இயக்குனர் சிவகரன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வள்ளலார் அருள் மாளிகைக்கு இன்று காலையில் வந்தனர். அப்போது முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது.

    தொடர்ந்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வள்ளலார் மாளிகையின் பின்பக்கமாக சென்ற அறநிலைய த் துறை ஊழியர்கள் அங்கிருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த பிரதான கதவை திறந்தனர்.  தொடர்ந்து வாயிலில் இருந்த கேட்டின் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். அங்கிருந்த அனைத்து பொருட்களையும் கணக்கெடுத்தனர். பின்னர் பரிக்கல் லட்சுமி நரசிம்மன் கோவில் செயல் அலுவலர் வரவழைக்கப்பட்டார். இந்த வள்ளலார் மாளிகையை நிர்வகிக்கும் பொறுப்பு அவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.

    இது குறித்து இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், தனியார் வசம் இருந்த விழுப்புரம் வள்ளலார் மாளிகை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. வழக்கம் போல அன்னதானமும், வழிபாடுகளும், ஜோதி தரிசனமும் நடைபெறும். இதனால் சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறினர். வள்ளலார் அருள் மாளிகையை இந்து அறநிலையத் துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்த சம்பவம் ஆன்மீகவாதிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×