search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udumalai farmers"

    • ஏற்றுமதி வாய்ப்புகள் இல்லாததால், வியாபாரிகளும், கொள்முதலை தவிர்த்து வருகின்றனர்.
    • தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாமல் விலை அதிகரித்து, நுகர்வோர் பாதிக்கப்படுவர்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு, பல ஆயிரம் ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சீசனுக்குப்பிறகு சாகுபடி பரப்பு அதிகரித்து, தேவையை விட கூடுதலாக சின்னவெங்காயம் உற்பத்தியானது. இதனால் விலை சரிந்து தற்போது வரை சீராகவில்லை.

    தற்போது தரத்தின் அடிப்படையில் கிலோ, 8 ரூபாய் முதல் அதிகபட்சமாக 12 ரூபாய் வரை, சின்னவெங்காயம் விலை நிலவரம் உள்ளது. விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் இல்லாததால், வியாபாரிகளும், கொள்முதலை தவிர்த்து வருகின்றனர்.

    கடந்த மாதம் இருப்பு வைத்தவர்களும் விலையேற்றம் இல்லாததால் கிடைக்கும் விலைக்கு இதனை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், போதிய விலை இல்லாததால் இதை அறுவடை செய்ய பெரியகோட்டை சுற்றுப்பகுதி விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    விலை வீழ்ச்சியால், அறுவடை செலவுக்குக்கூட, கட்டுபடியாகாத சூழ்நிலை உள்ளது. அதிக பணம் செலவழித்து பட்டறை அமைத்தவர்களுக்கும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது. எனவே சின்னவெங்காயத்தை அறுவடை செய்யவே தயக்கம் காட்டி வருகிறோம்.ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து அரசு ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மாதங்களாக வலியுறுத்தியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இந்த பாதிப்பால் அடுத்த சீசனில்இதை நடவு செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். அப்போது தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாமல் விலை அதிகரித்து, நுகர்வோர் பாதிக்கப்படுவர்.எனவே ஒவ்வொரு சீசனிலும், சாகுபடி பரப்பை தோட்டக்கலைத்துறை வாயிலாக கணக்கிட்ட, ஏற்றுமதி மற்றும் பிற மாநிலங்களில் விற்பனைக்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.இதனால் அனைத்து சீசன்களிலும் உற்பத்தி மற்றும் விலை நிலையாக இருக்கும். விவசாயி, நுகர்வோர் என இரு தரப்பினரும் பாதிப்பது தவிர்க்கப்படும் என்றனர்.

    ×