search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "thiruvettakudy temple"

  சைவசமய குரவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமே திருவேட்டக்குடி. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
  10-6-2018 கோவில் கும்பாபிஷேகம்

  சிறப்பான ஆலயங்கள் கொண்ட ஊரினை ‘புண்ணியதலங்கள்’ என்பர் சமயச் சான்றோர். அத்தலங்களில் சமய குரவர்களின் பாடல் பெற்ற தலங்களை ‘பாடல்பெற்ற தலங்கள்’ என்பர். சைவசமய குரவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமே திருவேட்டக்குடி.

  இறைவனின் பவளம் போன்ற மேனியில் பால் வெண்ணீற்றுக் கோலத்தைக் கண்ட சம்பந்தர் ‘சுடர்பவளத் திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்டக்குடியாரே’ என அவரது திருமேனி அழகில் லயித்து திளைத்துப் போகிறார். ஞான சம்பந்த பெருமானே இறைவன் பால் நாட்டம் கொண்டதால் இத்தல இறைவன் ‘திருமேனியழகர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவியின் பெயர் சாந்தநாயகி என்பதாகும். சவுந்திர நாயகி என்ற திருநாமமும் உண்டு.

  தலவரலாறு :

  சிவனால் முதலில் படைக்கப்பட்டவர் திருமால். இவர் தன் பங்கிற்கு பிரம்மாவைப் படைத்தார். பிரம்மன் உலகங்களையும் உயிர்களையும் படைத்தார். உயிர்கள் யாவும் தத்தம் இனத்தைப் பெருக்கி வாழ்ந்தன. இப்படி அவரவர் தங்கள் பணியை தடையின்றி மேற்கொள்வதை பார்த்த சிவபெருமான், கயிலை மலைக்குச் சென்று யோகநிஷ்டையில் அமர்ந்தார். ஒருகட்டத்தில் அவரது உடலும் உணர்வும் அசைவற்றுப்போக உலகில் வாழ்ந்த அனைத்து உயிர்களும் செயலற்றுப் போயின. இதனால் அதிர்ச்சியுற்ற பிரம்மாவும், திருமாலும் சிவனிடம் சென்று, யோக நிலையை கைவிட்டு மீளவேண்டுமென வேண்டினர்.

  பெருமானும் அவர்களது கோரிக்கையை ஏற்று யோகநிலையை கைவிட்டு அவர்களுக்கு அருள் புரிந்தார். அக்கணமே பிரம்மாவும், திருமாலும் தத்தம் செயல்திறனை மீண்டும் பெற்றனர். உலக உயிர்களும் உயிர்பெற்று பல்கி பெருகி வளரத் தொடங்கின.

  சிவனின் அற்புதத்தை அருகிலிருந்து கண்டு வியந்த அன்னை பார்வதிதேவி ‘அண்ட சராசரத்திலும் உள்ள அனைத்து உயிர்களுக்கும் மூச்சாக இருப்பது யார்?’ என்று கேட்டார்.

  அதற்கு ஈசன், ‘அதிலென்ன சந்தேகம் சாட்சாத் யாமேதாம்’ என்றார்.

  இதை ஏற்காத பார்வதிதேவி ‘இது உண்மையாயின் சற்றுநேரம் தாங்கள் மூச்சை அடக்கி சும்மா இருங்கள் பார்க்கலாம்’ என்று கேட்க, இறைவனும் அவ்வாறே மீண்டும் மூச்சை அடக்க அனைத்து உயிர்களும் மூச்சற்றுப் போயின. உயிர்கள் யாவும் மூச்சற்று முழு துயரில் இருப்பதை உணர்ந்த இறைவன், தான் அடக்கிய மூச்சை வெளியே விட, உயிர்கள் மீண்டும் உயிர் பெற்று வாழத் தொடங்கின.

  தம்மை சோதித்து உயிர்கள் யாவற்றிற்கும் துன்பத்தை விளைவித்த பார்வதியிடம், ‘நீ எம்மை சோதித்து உயிர்களுக்கெல்லாம் துன்பம் விளைவித்து விட்டாய். எனவே மீனவர் மரபில் பிறந்து அருந்தவம் செய்து எம்மை மீண்டும் வந்தடைவாயாக’ என்று அருளினார்.

  அதன்படி அம்மை புன்னை வனமாக இருந்த இத்தலத்தில் குழந்தை வடிவில் கிடந்தார். அவ்வழி வந்த மீனவர் ஒருவர் குழந்தையை பரிவோடும் பாசத்தோடும் எடுத்துச் சென்று வளர்க்கலானார். அப்பெண் சிறுமியாக வளர்ந்து உரிய நிலையை எய்திய பின்பு, சிவபெருமானை நினைத்து சிவலிங்கம் ஸ்தாபித்து சிவாகமப்படி பூஜித்து வந்தார்.

  இந்த நிலையில் சோமுகன் என்ற அசுரன், பிரம்மாவிடம் அரிய வரங்களைப் பெற்று, தேவர்களை துன்புறுத்தியதுடன், வேதங்களைத் திருடிச் சென்று கடலுக்குள் ஒளித்து வைத்தான். இதையடுத்து பிரம்மனும், தேவர்களும் வேதங்களை மீட்டுத் தரும்படி விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு பகவான் மச்ச (மீன்) அவதாரம் எடுத்து சோமுகனை அழித்து, வேதங்களை மீட்டுக் கொடுத்தார். அதன்பின்னரும் விஷ்ணுவின் சினம் அடங்காமல் போகவே, கடலை கலக்கினார். இதனால் உலகமே நடுங்கிற்று. உயிர்கள் தவித்தன. இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் கயிலாயம் சென்று, சிவனிடம் பணிந்து முறையிட்டனர். சிவபெருமான் அவர்களுக்கு அபயம் அளித்ததுடன் மீனவர் வடிவம் தாங்கி பூலோகம் வந்து, கடலை கலக்கிய பெரியமீனை பிடித்து தரைமீது கொண்டுவந்து போட்டார். அவ்வளவில் மீன்வடிவம் நீங்கிய பெருமாள் வைகுந்தம் சென்றருளினார்.

  பின்னர் மீனவர் வடிவில் வந்த ஈசன், புன்னை வனக்காட்டில் தவம் மேற்கொண்டிருந்த உமைய வளைக் கண்டு, தன் சுய வடிவம் காட்டியருள அம்மையும் ஐயனை வணங்கி நின்றாள். பின்னர் ஈசன் வேண்டுகோளுக்கிணங்கி கடலாடி சுய உருவைப் பெற்ற அன்னையிடம், ‘வேண்டிய வரம் கேள்’ என்றார் ஈசன்.

  உமைதேவி, ‘இறைவா! நான் ஸ்தாபித்து வழிபட்ட இந்த லிங்கத்தில் தாங்கள் இருந்து பக்தர் களுக்கு அருள வேண்டும். இந்த இடம் என் பெயரால் வழங்கப்பட வேண்டும்’ என்று வேண்டினாள். இறைவனும் அப்படியே அருள் செய்தார். பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

  கோவில் அமைப்பு :

  கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலை களுடன் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தில் சிற்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. கோபுர வாசல் கடந்து உள்ளே சென்றவுடன் ஒரு விசாலமான முன் மண்டபம், அதில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், முன்னால் கொடிமர விநாயகர், பலி பீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரம் வலம் வரும் போது சுந்தர விநாயகர் சன்னிதியும், மேற்குச் சுற்றில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னிதியும், புன்னை வனநாதர் சன்னிதியும், மகாலட்சுமி சன்னிதியும் இருக்கிறது. வடக்கு நோக்கிய பூரணை - புஷ்கலை உடனுறை ஐயனார், தெற்கு நோக்கிய சண்டிகேஸ்வரர் சன்னிதியும் இந்த ஆலயத்தில் உள்ளன.

  புன்னைவனநாதர் சன்னிதியின் முன்புறம் இடதுபுறத்தில் சம்பந்தரும், வலதுபுறத்தில் தனி சனி பகவானும் இடம் பிடித்துள்ளனர். வடகிழக்கில் நவக்கிரகங்களின் சன்னிதி உள்ளது. அதனை யொட்டி அலங்கார மண்டபமும் நால்வர், பைரவர், சூரியன், சந்திரன் சன்னிதிகள் அமைந்துள்ளன. கருவறையின் தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோரும் உள்ளனர். கருவறையில் மூலவர் திருமேனியழகர் என்கிற சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். அம்பாள் தனி சன்னிதியில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை "சாந்தநாயகி" என அழைக்கின்றனர். அம்பாள் சன்னிதியின் அருகில் பள்ளியறை இடம் பெற்றுள்ளது.

  தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

  காரைக்காலுக்கு வடகிழக்கே 10 கி.மீ. தூரத்தில் இந்த ஊர் உள்ளது. பொறையாறு - காரைக்கால் பேருந்து வழியில் வரிச்சிகுடி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது திருவேட்டக்குடி. இங்கு செல்ல ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன. 
  ×