search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the market have fallen"

    • காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் விலையும் சரிய தொடங்கியது.
    • உச்சத்தில் இருந்த சின்ன வெங்காயத்தின் விலை மெது மெதுவாக குறைய தொடங்கியது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம். திருப்பூர், தாளவாடி பெங்களூரு, கிருஷ்ணகிரி, மேட்டுப்பாளையம், தாளவாடி, ஆந்திரா, காங்கேயம் போன்ற பகுதியில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பல்வேறு காரணங்களால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதனால் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் ரூ.140 வரை உயர்ந்தது.

    இதேபோல் கருப்பு அவரை பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டியது. இதைப்போல் சின்ன வெங்காயம் வரத்து அடியோடு சரிந்ததால் ஒரு கிலோ ரூ.160 வரை விற்பனையானது. முக்கியமான காய்கறி விலை உயர்ந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மார்க்கெட்டில் மீண்டும் காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் விலையும் சரிய தொடங்கியது.

    இன்று வ.உ.சி. மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதியில் இருந்து 105 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் கடந்த வாரத்தை காட்டிலும் இன்று காய்கறிகள் விலை சற்று குறைந்து இருந்தது.

    குறிப்பாக கடந்த வாரம் ரூ. 120-க்கு விற்ற கருப்பு அவரை இன்று ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. இதேப்போல் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.80 க்கு விற்பனையானது.

    உச்சத்தில் இருந்த சின்ன வெங்காயத்தின் விலை மெது மெதுவாக குறைய தொடங்கியது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ. 120-ஆக இருந்த சின்ன வெங்காயம் இன்று ஒரு கிலோ ரூ. 100-ஆக குறைந்துள்ளது.

    இதேப்போல் பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ. 100-க்கு மேல் இருந்த நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.75 ஆக குறைந்துள்ளது. குடைமிளகாவும் ஒரு கிலோ ரூ.90 ஆக குறைந்துள்ளது.

    வ.உ.சி.மார்க்கெட்டில் இன்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    கத்திரிக்காய்-70, வெண்டைக்காய்-35, முள்ளங்கி-20, பாகற் காய்-60, பீர்க்கங்காய்-50, புடலங்காய்-40, சவ்சவ்-15, முருங்கைக்காய்-40,

    பட்ட அவரை-50, கேரட்-65, பீட்ரூட்-60, முட்டை கோஸ்-25, காலிப் பிளவர்-40, உருளைக்கிழங்கு-40, பெரிய வெங்காயம்-35, பழைய இஞ்சி-300, புதிய இஞ்சி-175.

    ×