search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tanjore serfoji college student"

    இலவச பஸ் பாஸ் வழங்க கோரி தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவ - மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசுகலைக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் அரவிந்த் தலைமையில் சரபோஜி கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியே வந்தனர்.

    பின்னர் அவர்கள் கல்லூரி அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் தஞ்சை நகர டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மாணவர்கள் எங்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் கல்லூரி செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டினர். மேலும் இலவச பஸ் பாஸ் கேட்டு பல முறை மாணவர்கள் போராட்டம் நடத்தி உள்ளோம். இருந்தும் பஸ் பாஸ் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதால் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். புதிய பஸ் நிலையம் பகுதியில் மாணவ-மாணவிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×