search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Level"

    • தஞ்சாவூர் மாநகரில் 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன.
    • கல்லுக்குளம் நகர்ப்புற சுகாதார நிலையம் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்தது.

    தஞ்சாவூர்:

    தமிழக அளவில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கல்லுக்குளம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதலிடம் பெற்றுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் 312 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில், தஞ்சாவூர் மாநகரில் கல்லுக்குளம், கரந்தை, மகர்நோன்புசாவடி, சீனிவாசபுரம் ஆகிய 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன.

    தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை ஏப்ரல் மாதம் முதல் ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள் அடிப்படையில் தரவரிசை பட்டியலை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.

    புற நோயாளிகள் வருகை, உள்நோயாளி அனுமதி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் பிரசவ எண்ணிக்கை, ஆய்வக பரிசோதனைகள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், கருப்பைவாய் பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்களின் பதிவு, கருத்தரித்தவுடன் 12 வாரத்துக்குள் கர்ப்பிணி தாய்மார்களின் பதிவு, இரும்பு சத்து மாத்திரை வழங்குதல், குழந்தை பிறப்பின்போது 2.5 கிலோவுக்கும் அதிகமான எடை இருத்தல், குழந்தைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, 312 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதில், அக்டோபர் மாதத்துக்கான தரவரிசை பட்டியலில் கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இரண்டாமிடத்தையும், மகர்நோன்புசாவடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் நான்காமிடத்தையும், சீனிவாசபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஏழாமிடத்தையும் பெற்றுள்ளன.

    இது தொடர்பாக மருத்துவக் குழுவினருக்கு மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் வீ.சி. சுபாஷ் காந்தி ஆகியோர் பாராட்டினர்.

    ×