என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை விமான நிலையம்"

    • புதிய முனையத்தில் தொடர்ந்து சிறிய மற்றும் நடுத்தர ரக விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
    • டி-3 பழைய சர்வதேச முன்னையத்தை இடிக்கும் பணி அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று தெரிகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில், ஒருங்கிணைந்த சர்வதேச புதிய விமான முனையத்தின் முதல் கட்டிடம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 295 சதுரமீட்டர் பரப்பில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    புதிய ஒருங்கிணைந்த முனையத்தில், முதல் சோதனை ஓட்டம், கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி தொடங்கியது.அதன் பின்னர் மே மாதம் 3-ந் தேதி, 3 விமானங்கள் சோதனை அடிப்படையில், புதிய முனையத்தில் இயக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து மேலும் சில விமானங்கள் புதிய முனையத்தில், சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டது.

    ஜூன் முதல் வாரத்தில் இருந்து, புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமானமுனையத்தில், முழு அளவிலான, வழக்கமான சர்வதேச வருகை, புறப்பாடு விமானங்கள் அனைத்தும் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    ஆனால் விமானங்கள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டபோது, சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டதால் அதனை சரி செய்து தொடர்ந்து சோதனை ஓட்டம் நடந்து வந்தது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி, ஜூன் முதல் வாரத்தில், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில் இருந்து, முழு அளவில் விமானங்கள் இயக்கப்படவில்லை. புதிய முனையத்தில் தொடர்ந்து சிறிய மற்றும் நடுத்தர ரக விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.

    கடந்த 13-ந் தேதியில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் அனைத்து சர்வதேச விமானங்களும், இந்த புதிய முனையத்தில் வருகை, புறப்பாடுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், அடுத்தபடியாக வங்கதேசம் தலைநகர் டாக்காவுக்கு இயக்கப்படும் யூ எஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு இயக்கப்படும் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவைகளும் புதிய முனையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று முதல், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து சர்வதேச விமானங்களும், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையமான டெர்மினல்-2 ல் இருந்து இயங்கத் தொடங்கி உள்ளது. இதன்மூலம் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோகா, தமாம், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கு புதிய விமான நிலையத்தில் இருந்து விமான சேவை அதிகரித்து இயக்கப்படுகிறது. சுமார் 18 புறப்பாடு விமானங்கள், 18 வருகை விமானங்கள் என மொத்தம் 36 சர்வதேச விமான சேவைகள் இன்று முதல் முழுஅளவில் இயங்கத் தொடங்கிஉள்ளன.

    பெரிய ரக விமானங்களான பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ், லுப்தான்ஷா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ், எத்தியாட் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமானங்கள் அடுத்த சில நாட்களில் அல்லது ஜூலை முதல் வாரத்தில், புதிய முனையத்தில் இருந்து இயங்கும் என்று தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து ஜூலை முதல் வாரத்தில் இருந்து, புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வருகிறது. அதன்பின்னர் தற்போது செயல்பாட்டில் இருக்கும், டெர்மினல்-3 என்ற (டி 3)பழைய சர்வதேச முணையம், முழுமையாக மூடப்படும். மேலும் டி-3 பழைய சர்வதேச முன்னையத்தை இடிக்கும் பணி அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று தெரிகிறது. இதன்பின்னர் புதியமுனையத்தில் 2-ம் கட்ட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பயண நேரம் குறைவு என்பதால் விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    • வழக்கமான கட்டணத்தை விட தற்போது 3 மடங்கு விமான கட்டணங்கள் உள்ளன.

    ஆலந்தூர்:

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள்(12-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்கள், பஸ்களில் டிக்கெட்கள் இல்லை. அரசு சிறப்பு பஸ்கள் அனைத்திலும், ஏற்கனவே பயணிகள் முன்பதிவு செய்து விட்டனர்.

    இதையடுத்து விமான பயணத்தை பெரும்பாலானோர் தற்போது தேர்வு செய்து வருகிறார்கள். பயண நேரம் குறைவு என்பதால் விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நேற்று முதல் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை, கோவை செல்லும் விமானங்களில் வழக்கத்தை விட பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் இன்றும், நாளையும் (வெள்ளி, சனி) இந்த விமானங்களில், பெரும்பாலான டிக்கெட் விற்று தீர்ந்தன. ஒரு சில உயர் வகுப்பு டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அந்த டிக்கெட் கட்டணங்கள் மிகவும் அதிகமாக உள்ளன. வழக்கமான கட்டணத்தை விட தற்போது 3 மடங்கு விமான கட்டணங்கள் உள்ளன. சென்னை-சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,390. ஆனால் இன்றும், நாளையும் இதன் கட்டணம் ரூ.11,504 ஆக உள்ளது. இதேபோல் தூத்துக்குடி-ரூ.13,287, கோவை-ரூ.13,709, திருச்சி-ரூ.13,086, மதுரை-ரூ.13,415 ஆக உயர்ந்து உள்ளன.

    விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தாலும், சொந்த ஊரில் தங்கள் குடும்பத்தாருடன் தீபாவளி பண்டிகையை, கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் கட்டணத்தை பற்றி யோசிக்காமல், போட்டிப்போட்டுக் கொண்டு, விமான பயணம் செல்கின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில், பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

    • மோசடி கும்பலிடம் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டாம்.
    • போலியான அழைப்புகள் வந்தால் அந்த தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பயணிகள் புகார் செய்யுங்கள் என்று அறிவித்து உள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக மோசமான வானிலை, புயல் மற்றும் கனமழை காரணமாக பல விமானங்கள் தாமதம், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    இதை பயன்படுத்திக் கொண்டு மோசடி கும்பல் தற்போது புதுவிதமாக பாதிக்கப்பட்ட விமான பயணிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விமான பயணம் தாமதம் அல்லது ரத்து போன்றவற்றிற்கு இழப்பீடுகள் தருவதாக கூறி வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டு சுருட்டி வருகின்றனர்.

    இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயரை பயன்படுத்தி, விமான பயணிகளிடம் நூதன முறையில் மோசடி செய்யும் கும்பல் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயரை பயன்படுத்தி, விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து ஆனதற்கு தகுந்த இழப்பீட்டுத் தொகையை கொடுக்கப் போவதாக, போலியான செல்போன் அழைப்புகள் மூலம், பயணிகளை ஏமாற்றி வருகின்றனர். அதற்கும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

    அதைப் போன்ற இழப்பீடுகள் கொடுக்கும் திட்டமும் இல்லை. எனவே இதைப் போன்ற போலியான செல்போன் அழைப்புகள் வந்தால், பயணிகள் யாரும் அதை நம்ப வேண்டாம்.

    பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக அவர்கள் பயணிக்க இருந்த விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு, விவரங்கள் கேட்டு அறிந்து, தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மோசடி கும்பலிடம் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் பயணிகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. போலியான அழைப்புகள் வந்தால் அந்த தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பயணிகள் புகார் செய்யுங்கள் என்று அறிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, இந்த போலி மோசடி கும்பல் குறித்து போலீசிலும் புகார் தெரிவித்து உள்ளோம் என்றனர்.

    ×