என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Save Soil"

    • வாகன ஓட்டுநர்களுக்கு ‘மண் காப்போம்’ என்ற ஸ்டிக்கர்களை விநியோகித்தனர்.
    • மண் காப்போம் இயக்கத்திற்கு 74 நாடுகள், 11 இந்திய மாநிலங்கள், 9 ஐ.நா அமைப்புகள் ஆதரவு

    சென்னை:

    உலக மண் தினத்தை முன்னிட்டு 'மண் காப்போம்' இயக்கம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் மண் வளப் பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று (டிசம்பர் 5) நடைபெற்றன.

    வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரகுநாதன் தலைமை தாங்கினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மண் வளம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், விவசாயிகளின் விளைச்சலும் குறைந்து கொண்டே வருகிறது. இழந்த மண் வளத்தை மீட்டெடுக்காவிட்டால் எதிர்கால தலைமுறையினர் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பார்கள்" என்றார்.

    இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரியின் துணை முதல்வர் ராஜஸ்ரீ, சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் கோபி, ஜெயராஜ் ஆகியோரும் உடன் பங்கேற்றனர்.

    இதேபோல், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கபாலீஸ்வரர் கோவில், தில்லைநகர் சப் வே, ஆவடி பஸ் டிப்போ, மீனாட்சி கல்லூரி, வளசரவாக்கம் சிவன் பார்க், பெரம்பூர் பஸ் நிறுத்தம், மாதவரம் ரவுண்டானா உட்பட சுமார் 20 இடங்களில் 'மண் காப்போம்' இயக்கத்தின் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். வாகன ஓட்டுநர்களுக்கு 'மண் காப்போம்' என்ற ஸ்டிக்கர்களை விநியோகித்து இவ்வியக்கத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தனர்.

    அனைத்து விவசாய நிலங்களிலும் குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதம் கரிம சத்து இருக்க வேண்டும். அதற்காக செயல் செய்யும் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்க வேண்டும். மர விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கார்பன் கிரெடிட் என்ற பெயரில் மானியம் வழங்க வேண்டும். 3 சதவீதற்கும் மேல் கரிம சத்து கொண்ட மண்ணில் விளையும் விளைப் பொருட்களுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்பது இவ்வியக்கத்தின் பிரதான பரிந்துரைகள் ஆகும்.

    மண் வளப் பாதுகாப்பு குறித்த சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்க வலியுறுத்தி சத்குரு, மண் காப்போம் இயக்கத்தை இந்தாண்டு தொடங்கினார். இதற்காக அவர் மார்ச் 21-ம் தேதி முதல் 100 நாட்களில் 27 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் சவாலான பயணம் மேற்கொண்டு உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் விளைவாக, 74 நாடுகள், 11 இந்திய மாநிலங்கள், 9 ஐ.நா அமைப்புகள் இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்தன. மேலும், இதுவரை 391 கோடி மக்களும் இவ்வியக்கத்திற்காக குரல் கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில், உலக மண் தினமான இன்று (டிச.5) தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இவ்வியக்கத்தின் தன்னார்வலர்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கருப்பு கவுனி அரிசியை கடந்த 4 வருடமாக முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம்.
    • இதுவரை 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நாங்கள் இயற்கை விவசாய பயிற்சிகள் அளித்துள்ளோம்.

    ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை சமவெளியில் வெற்றிகரமாக சாகுபடி செய்து ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சாதனை படைத்துள்ளது.

    இது தொடர்பாக அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் கூறுகையில், "எங்களுடைய மண் காப்போம் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாய பயிற்சிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகிறோம். மொத்தம் 60 ஏக்கர் பரப்பில் பல்வேறு விதமான பயிர்களை பரிசோதனை முயற்சியாக வெவ்வேறு இயற்கை நுட்பங்களை பயன்படுத்தி பயிர் செய்து வருகிறோம்.

    அந்த வகையில், கோவையில் செம்மேடு கிராமத்தில் உள்ள எங்களுடைய மாதிரி பண்ணையில் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை தலா 30 சென்ட் என்ற பரப்பளவில் பிரதான பயிராக பயிரிட்டோம். 120 நாட்களுக்கு பிறகு தற்போது நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல பருமனாகவும் நீளமாகவும் கேரட் விளைந்துள்ளது.

    பொதுவாக காய்கறி கடைக்கு சென்று 1 கிலோ கேரட் வாங்கினால் 12 முதல் 13 கேரட் பிடிக்கும். ஆனால், நாங்கள் எந்தவித ரசாயனங்களையும் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் ஜீவாமிர்தம் மட்டுமே பயன்படுத்தி விளைவித்ததால் 6 அல்லது 7 கேரட்களை எடை போட்டாலே ஒரு கிலோ வந்துவிடும். அதை வைத்து பார்க்கும்போது விளைச்சலும் நல்ல முறையில் வந்துள்ளது. பூச்சி மேலாண்மைக்காகவும், நல்ல விளைச்சலுக்காகவும் வேப்பங்கொட்டை கரைசல் பயன்படுத்தினோம்.

    கேரட் மட்டுமின்றி, பீட்ரூட்டின் வளர்ச்சியும் சிறப்பாக வந்துள்ளது. இதைப்போலவே முள்ளங்கி, கொத்தமல்லி ஆகியவற்றையும் பயிர் செய்து வருகிறோம். இந்த முறை மழை அதிகமாக பெய்தபோது ஏற்பட்ட பூஞ்சை தாக்குதலுக்கு புளித்த மோர்க்கரைசல் தெளிக்கப்பட்டு நன்றாக வளர்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டதால், விளைச்சலில் எந்தக்குறையும் ஏற்படவில்லை. நாளை நடக்கவுள்ள அறுவடையில் 1.5 டன் அளவிற்கு விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இதேபோன்று, பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி அரிசியும் நாங்கள் கடந்த 4 வருடமாக முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு இரண்டே கால் டன் விளைச்சல் கிடைத்துள்ளது. எங்கள் தோட்டத்திற்கு அருகில் ரசாயன விவசாயம் செய்யும் விவசாயிகள் எடுக்கும் விளைச்சலை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படி, நாங்கள் பரிசோதனை செய்து வெற்றி பெற்ற இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள்  அனைத்தையும் விவசாயிகளுக்கு நேரடி களப் பயிற்சியாக சொல்லித் தருகிறோம். இதுவரை 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நாங்கள் இயற்கை விவசாய பயிற்சிகள் அளித்துள்ளோம். அதில் நிறைய பேர் வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் விவசாயம் செய்து முன்னோடி விவசாயிகளாக மாறி உள்ளனர். பின்னர், அவர்களுடைய தோட்டத்திலேயே புது விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சிகளை தமிழ்நாடு முழுவதும் கற்றுக்கொடுத்து வருகிறோம்." என்றார்.

    • பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களை மதிப்பு கூட்டி தரும்போது லாபகரமாக செய்ய முடிகிறது.
    • இந்த 2023 வருடத்தை சிறுதானிய உணவுகளுக்கான வருடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    கோவை:

    உலக மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பாக கோவை பேரூர் தமிழ்க்கல்லூரியில் இன்று (8 மார்ச்) நடந்த 'வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியமே' என்ற நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக பேரூர் ஆதீனத்தின் அருள்திரு மருதாசல அடிகளார் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் "பேரூர் ஆதீனம் ஈஷாவுடன் இணைந்து பல வருடங்களாக பல்வேறு செயல்களை செய்து வருகிறது. சத்குரு முன்னெடுத்துள்ள பல அற்புதமான திட்டங்களில் சிறப்பானதொரு திட்டம் இந்த மண் காப்போம். இதற்காக அவர் உலகம் முழுக்க பயணித்து கோவை திரும்பியபோது பேரூர் ஆதீனம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மண் காப்போம் இயக்கத்தின் இந்த நிகழ்ச்சி மகளிருக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்க வழிகாட்டும் சிறப்பான நிகழ்வாக அமைந்திருக்கிறது" என்று கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    திட்ட விளக்க உரை வழங்கிய மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 25 வருடங்களாக மண் வள மேம்பாடு, அதன் மூலம் மனித ஆரோக்கியம், விவசாயிகள் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்காக பல்வேறு செயல்கள் செய்து வருகிறது.

    பெண்களுக்கு இருக்கும் தொழில் வாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி உதவும். இது துவக்கம் தான். இதில் தங்களுக்கு திறக்கும் வாய்ப்புகள் வழியாக உங்களை வெற்றிக்கு அழைத்து செல்ல விரும்புகிறோம்" என்றார்.

    மண்வாசனை நிறுவனத்தின் மேனகா பேசுகையில், தினமும் மூன்று வேளை சமைப்பதையே பலரும் வாழ்வின் இலக்காக வைத்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். நாங்கள் 20 வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தோம். நீங்கள் சொல்வதை செய்ய விரும்புகிறோம். ஆனால் வாழ்வாதாரம் பற்றி உள்ள பயத்தை அவரிடம் சொன்னோம். அதற்கு அவர், 'உங்கள் வாழ்வாதாரத்தை இயற்கை பார்த்துக் கொள்ளும்' என்றார். அந்த ஒரு வார்த்தை எங்களை இன்று வரை நகர்த்துகிறது.

    பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களை நேரடியாக தரும்போது உட்கொள்ள சிரமப்படுகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு, மதிப்பு கூட்டி தரும்போது லாபகரமாக செய்ய முடிகிறது.

    இந்த 2023 வருடத்தை சிறுதானிய உணவுகளுக்கான வருடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்தளவிற்கு சிறுதானிய உணவுகளுக்கான அதிமுக்கியமான தேவை உள்ளது, என்றார்.

    அவரைத்தொடர்ந்து மாடித்தோட்ட பயிற்சியாளரும் தமிழ்நாடு பாரம்பரிய விதை சேகரிப்பு குழுவைச் சார்ந்தவருமான திருமதி. பிரியா ராஜ்நாராயணன், தேனீ வளர்ப்பில் பல்வேறு சாதனைகள் புரிந்து இந்திய மற்றும் தமிழக அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள ஜோஸ்பின் மேரி, நாட்டு மாடுகளை பேணிக் காத்து அதிலிருந்து நிலையான வருமானம் பெற முடியும் என்று சாதித்துக் காட்டிய முனைவர் யமுனாதேவி ஆகியோரும் பல்வேறு தொழில் வாய்ப்புகள் பற்றி சிறப்புரை ஆற்றினர்.

    மேலும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற்றது.

    பங்கேற்பாளர்களின் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக கேள்வி பதில் பகுதியும் நடந்தது. இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து உலக பொருளாதார மாநாட்டில் சத்குரு பேசினார்.

    “இந்தப் பூமியில் உள்ள யாரும் மண் வளத்தை மேம்படுத்துவத்திற்கு எதிராக இல்லை. ஏனென்றால், வளமான மண் தான், நம்முடைய வளமான வாழ்க்கையின் ஆதாரம். ஆரோக்கியமான மண்ணும் ஆரோக்கியமான வாழ்வும் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது” என உலக பொருளாதார மாநாட்டில் சத்குரு பேசினார்.

    சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. 150-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் சத்குரு ‘நகரங்களின் எதிர்காலம்’ (Future of Cities) என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

    அப்போது, உலகின் நீண்ட கால நல்வாழ்வு, உணவு பாதுகாப்பை உறுதி செய்வது, மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதை குறைப்பது, விவசாயிகள் தங்கள் நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்வது போன்றவற்றிற்கு மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து சத்குரு பேசினார்.

    மேலும், வளம் இழந்த நிலங்களை மீட்டெடுக்க ‘ஒரு கட்டிட நகரம்’ (One Building City) என்ற தனது யோசனை பகிர்ந்து கொண்டார். அதுகுறித்து பேசுகையில், “நகரங்களில் மக்களின் நெரிசலை குறைக்கும் விதமாக, நகரங்களுக்கு வெளியே அதிக நிலம் இருக்கும் இடங்களில் கட்டிடங்கள் கட்டுவதை கட்டுமான துறையினர் பரீசிலிக்க வேண்டும். உதாரணத்திற்கு, 50 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கரில் மட்டும் 50 முதல் 100 மாடி கட்டிடங்களை கட்டலாம். மீதமுள்ள 49 ஏக்கரில் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக காடு உருவாக்கலாம். நீங்கள் விரும்பினால், உங்களுக்கு தேவையான பழங்கள் மற்றும் காய்கறிகளையும் அங்கு சாகுபடி செய்து கொள்ளலாம்” என கூறினார்.

    சில நகரங்களில் மட்டும் அளவுக்கு அதிகமாக செய்யப்படும் பொருளாதார முதலீடுகள் குறித்து பேசுகையில், “உலகில் 72 சதவீத பொருளாதார முதலீடுகள் வெறும் 31 நகரங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. இதனால், அந்த பெருநகரங்கள் பிற மாவட்டங்களில் இருந்து மக்களை இடம்பெயர செய்யும் காந்தமாக செயல்படுவதோடு மட்டுமின்றி, மேலும், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் புத்திசாலித்தனமற்றதாகவும் மாறுகிறது. இதற்கு பதிலாக, முதலீடுகளை அனைத்து இடங்களிலும் பரவலாக்க வேண்டும். மக்கள் அதிகம் வசிக்கும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.

    இம்மாநாட்டில் ஈக்வடார் நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் ஹெலனா கவுலிங்கா, இந்திய - அமெரிக்க எழுத்தாளர் தீபக் சோப்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    சத்குரு தனது 65 வயதில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக 100 நாட்களில் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்ட அவர்கள் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் செய்து வருகிறார். இதுவரை 72 நாடுகள் மண் காப்போம் இயக்கத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.
    ×