search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Strike on 27th to protest against collection of business tax from tea plantation workers"

    • கோவை, நீலகிரி, தேனி, நெல்லை மாவட்டங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
    • தினக்கூலி பெறும் தொழிலாளர்களிடம் ஆண்டுக்கு 2 முறை தொழில்வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

    கோவை,

    தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது.

    கூட்டமைப்பின் தலைவர் வால்பாறை அமீது தலைமை தாங்கினார். எல்.பி.எப் தோட்ட தொழிலாளர் பிரிவு மாநில செயலாளர் செல்வராஜ், கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்கள் வினோத்குமார், கேசவ முருகன், பொருளாளர் மோகன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் போஜராஜன், ஐ.என்.டி.யு.சி கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டமைப்பு தலைவர் வால்பாறை அமீது கூறியதாவது:-

    தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, நெல்லை மாவட்டங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.இதில் தினக்கூலி பெறும் தொழிலாளர்களிடம் ஆண்டுக்கு 2 முறை தொழில்வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

    எனவே இதை கண்டித்து வருகிற 18-ந் தேதி வால்பாறையில் உள்ள வாட்டர்பால்ஸ் பகுதியில் இருக்கும் குரூப் அலுவலகம் முன்பும், 19-ந் தேதி கருமலை எஸ்டேட் பகுதியிலும், 20-ந் தேதி சோலையாறு பகுதியிலும், 23-ந் தேதி கோவை ஏ.டி.டி காலனியில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட அதிபர் சங்க அலுவலகம் முன்பும் மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அத்துடன் வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்த போராட்டமும் நடத்தப்படுகிறது.

    மேலும் அரசு தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு தற்போது ரூ.352 கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்த கூலியாக ரூ.425-ஐ வழங்க வேண்டும். அதற்கான இறுதி ஆணை வரும் வரை தனியார் தேயிலை தோட்டங்களில் தினக்கூலியாக வழங்கப்படுவது போன்று அரசு தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.409.83-யை வழங்க வேண்டும்.

    தொழிற்சங்க கூட்டமைப்பு போராடி ஒப்பந்தம் ஏற்படுத்தியன் பேரில் தனியார் தேயிலை தோட்ட ஆண்-பெண் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டதால் ரூ.32 ஆயிரம் நிலுவை தொகை வழங்கப்பட்டது. ஆனால் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அது இழப்பாக உள்ளது. எனவே கூலியை உயர்த்தி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் நிர்வாகிகள் வீரமணி, தங்கவேல், செந்தில்குமார், கவுன்சிலர் மணிகண்டன், பி.டி.எம்.செந்தில்முருகன், எச்.எம்.எஸ்.ஜெபஸ்டின், மாஞ்சோலை பிரேம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×