search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sterlite resolution"

    ஸ்டெர்லைட் ஆலையை மூட‌ சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்தனர். #Sterlite

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் 22-ந்தேதி வழக்கு தாக்கல் செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்து கடந்த 15-ந்தேதி உத்தரவிட்டது. இதன் காரணமாக தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆலையை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த வக்கீல் அரி ராகவன், மகேஷ் ஆகியோர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை கண்டித்து இன்று (புதன்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்கள், நகரங்களில் உள்ள வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

    அதன்படி இன்று காலை தூத்துக்குடி பண்டாரம்பட்டி, அ.குமரெட்டியாபுரம், மீளாவிட்டான் உள்ளிட்ட கிராமங்களிலும், சுற்றுப்பகுதியிலும் சில வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. தெருக்களிலும் கருப்புக்கொடி கட்டப்பட்டன. தூத்துக்குடி பாத்திமாநகரில் அப்பகுதியினர் சிலர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற சென்றனர்.


     

    இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது. பின்பு பொதுமக்கள் சாலை ஓரம் கருப்புக்கொடியுடன் நின்று கோ‌ஷம் எழுப்பினர். இதனிடையே தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி கொள்கை முடிவு எடுத்து சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கலெக்டரை வருகிற 21-ந்தேதி மக்கள் கூட்டமைப்பு சார்பில் சந்திக்க முடிவு செய்து உள்ளனர்.

    அதில் மக்கள் கூட்டமைப்பை சேர்ந்து உள்ள அனைத்து கிராம மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே தூத்துக்குடி டபிள்யூ.சி.சி. ரோட்டில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகம் அருகே அக்கட்சியினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாலன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், துணைச்செயலாளர் செல்வக்குமார், எட்வின் பாண்டியன், கோட்டாள முத்து, தொழிற்சங்க துணைத் தலைவர் சண்முக குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு கொடியேந்தி ஸ்டெர்லைட்டை மூடக்கோரி கோ‌ஷம் எழுப்பினார்கள். திடீரென அவர்கள் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    ×