search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "state status puducherry"

    புதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், கவர்னர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #governorkiranbedi #narayanasamy

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் யூனியன் பிரதேசமாக உள்ளதால் மற்ற மாநிலங்களை போல் முழு அதிகாரம் வழங்கப்படவில்லை.

    மத்திய அரசின் உள்துறையின் கட்டுப்பாட்டில் புதுவை இயங்கி வருகிறது. எனவே, புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் புதுவை மாநிலம் மீது மத்திய அரசு சமீப காலமாக அதிக அதிகாரம் செலுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் புதுவை கவர்னர் கிரண்பேடி தனக்குத்தான் கூடுதல் அதிகாரம் இருப்பதாக கூறி நிர்வாக வி‌ஷயங்களில் தலையிட்டு வருகிறார்.

    எனவே, புதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், கவர்னர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்துவது என்று காங்கிரஸ் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தை எதிர்க் கட்சியான என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.

    டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 21 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

    இதற்காக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க விரும்பும் தொண்டர்களின் பட்டியல் பெறப்பட்டு அவர்கள் ரெயில் மூலம் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    புதுவையில் இருந்து டெல்லி செல்லும் ரெயிலில் நேற்று முன்தினம் 380 தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர்.

    அவர்களை புதுவை ரெயில் நிலையத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர். இதே போல் காரைக்காலில் இருந்து 40 தொண்டர்கள் டெல்லி சென்றனர்.

    இதையடுத்து நேற்றைய தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் டெல்லி சென்றனர். அங்கு அவர்கள் கரோல் பார்க்கில் உள்ள தனியார் விடுதியில் தங்கினர்.


    இதற்கிடையே புதுவையில் இருந்து டெல்லி சென்ற ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் டெல்லியை அடைந்தது. அங்கு கட்சி தொண்டர்களை புதுவை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    டெல்லியில் உள்ள புதுவை, சத்தீஸ்கார், மத்திய பிரதேசம் அரசு விடுதிகள் மற்றும் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

    அங்கிருந்து இன்று காலை 10 மணி அளவில் பஸ்கள் மூலம் ஜந்தர் மந்திர் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். ஜந்தர் மந்திரில் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

    ஆர்ப்பாட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கலக்கண்ணன், தி.மு.க. அமைப்பாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ. பொழிலன், புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம் மற்றும் கட்சி தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

    சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தனபால், விஜயவேணி ஆகியோரும் பங்கேற்றனர்.

    தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ராஜா மற்றும் பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையையும், கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆங்கிலத்தில் பதாகைகள் வைத்திருந்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். #governorkiranbedi #narayanasamy

    ×