search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Resolutions"

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார். கூட்டத்தில் நகராட்சி சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்படும் தினசரி அங்காடிக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு தினசரி சந்தை என பெயர் வைத்து நினைவு வளைவு அமைக்க சிறப்பு தீர்மானம் உள்ளிட்ட நகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான 84 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து தீர்மானங்களின் மீது உறுப்பினாகள் பேசியதாவது:-

    10-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் ராஜவேல்: 400 பஸ்கள் வந்து செல்லும் வசதி கொண்ட பஸ் நிலையம் இருக்கும்போது புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்படுவதாக அறிகிறோம். அதற்கு பதிலாக நகராட்சி இடங்களில் வணிக வளாகங்கள் கட்டினால் நகராட்சிக்கு வருமானம் வர ஏதுவாக இருக்கும்.

    நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு: திருச்செங்கோடு நகரின் வளர்ச்சி நிலையையும் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு தான் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரில் பஸ்கள் அதிகமாக உள்ளே நுழைவதால் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு இடம் தேர்வு நடந்து வருகிறது. தற்போது உள்ள பஸ் நிலையம் எப்போதும் போல் இயங்கி வரும்.

    18-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் ரவிக்குமார்: நகராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து பூமி பூஜைகள் போடும்போது நகர மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்காததால் ஒரே திட்டத்திற்கு நகராட்சி நிதியும், எம்.எல்.ஏ. நிதியும் ஒதுக்கும் குழப்பமான சூழ்நிலை உருவாகிறது. எனவே இதனை அதிகாரிகள் கவனித்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்து சீர்படுத்த வேண்டும்.

    20-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் சண்முக வடிவு:

    கூட்டப்பள்ளி பகுதியில் பஸ் நிழற்குடை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே நிழற்குடை இருந்ததை அகற்றிவிட்டு தான் சாலை விரிவாக்க பணி நடந்தது. எனவே அதே இடத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    5-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் ராஜா: எனது வார்டு பகுதியில் நெசவாளர் காலனி பள்ளியில் 1500 மாணவிகள் படித்து வருகின்றனர். இது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். நகராட்சி கல்வி நிதியிலிருந்து 6 வகுப்பறைகள் கட்டித்தர ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு: உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டத்தின்படி வரும் டிசம்பர் 8-ந் தேதி 1 முதல் 8 வார்டுகளுக்கு பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் நகராட்சி தேவைகள் மட்டுமல்லாது அனைத்து துறைகள் சார்ந்த பட்டா மாறுதல், பிறப்புச் சான்றிதழ், இறப்பு சான்றிதழ், தனி நபர் பிரச்சனைகள் என எதுவாக இருந்தாலும் மனு கொடுத்தால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய பதில் வழங்கப்படும். எனவே இது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் துண்டறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை 1 முதல் 8 வார்டுகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் நகர்மன்ற உறுப்பினர்கள் வழங்கி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ×