என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார் மக்கள்"

    • நான் சம்பாதித்த பணத்தில் சொந்த ஊரில் இடம் வாங்கி இருக்கிறேன்.
    • நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும் எங்களிடம் அன்பாக பழகுகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பீகார் உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இதற்கிடையே பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, முசாபர்பூரில் நேற்று முன்தினம் நடந்த பா.ஜ.க. கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அதில் அவர் ராகுல்காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு விஷயங்களை பேசினார்.

    அப்போது, 'கர்நாடகா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பீகாரைச் சேர்ந்த மக்களை திட்டுகிறார்கள். அவர்களின் கூட்டணி கட்சியான தி.மு.க.வும் தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த மக்களை துன்புறுத்துகிறார்கள்' என்று பேசியிருந்தார்.

    பிரதமரின் இந்த பேச்சு தமிழக கட்சித்தலைவர்களை கொதிப்படைய செய்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க,ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் மோடி சொன்னது போல, தமிழ்நாட்டில் தங்கி வேலை பார்க்கும் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? என்பது குறித்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் வருமாறு:-

    சென்னையில் கட்டிட வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தன்வீர் கூறியதாவது:-

    நான் 5 ஆண்டுகளாக கட்டிட வேலை பார்க்கிறேன். குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு வந்தேன். வாரத்துக்கு 6 நாட்கள் வேலை பார்த்தால் போதும். ஒரு நாள் விடுமுறை. அந்த நாளில் எங்களை வேலை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்த மாட்டார்கள். விருப்பம் இருந்தால் வேலை பார்க்கலாம்.

    ஒரு நாள் சம்பளம் ரூ.1,000. எங்களுடன் சேர்ந்து தமிழ் ஆட்களும் வேலை செய்கிறார்கள். என்னை போல, பலர் இங்கு தங்கி பணி செய்கிறார்கள். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சொந்த மாநிலத்தில் எங்கள் வீட்டில் எப்படி இருந்து வேலை பார்ப்போமோ? அதேபோல்தான் இங்கு இருந்து வேலை பார்க்கிறேன்.

    சென்னையில் பரோட்டா மாஸ்டராக இருக்கும் பப்பு குமார்:-

    சென்னைக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. ஓட்டலில் முதலில் 'சப்ளையராக' பணியை தொடங்கி, இப்போது பரோட்டா மாஸ்டராக இருக்கிறேன். கடை உரிமையாளர் தங்குவதற்கு வசதியும் செய்து கொடுத்து இருக்கிறார். சொந்த ஊரில் இருப்பது போலவே உணருகிறேன்.

    கடைக்கு சாப்பிட வருபவர்களும், கடை உரிமையாளர்களும் கடுமையாக நடந்தது கிடையாது. எங்களை யாரும் துன்புறுத்தவில்லை. எப்போது லீவு கேட்டாலும் உரிமையாளர் முகம் சுழிக்காமல் கொடுப்பார். தமிழ் ஆட்களுக்கு என்ன சம்பளம் தருகிறார்களோ? அதே சம்பளத்தைதான் எங்களுக்கு கொடுக்கிறார். இங்கு வந்து அழகாய் தமிழ் பேசக்கற்றுக்கொண்டுவிட்டேன்.

    சென்னையில் வேலை பார்க்கும் பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த ஷரீப், சபீர், காசிம் ஆகியோர் கூறியதாவது:-

    சென்னை எங்கள் ஊரை விட அருமையாக இருக்கிறது. பருப்பு சாதம், சப்பாத்தி என இருமாநிலங்களுக்கும் பொதுவான உணவுகள் நிறைய இருக்கின்றன. தமிழக மக்களும் எங்கள் மீது அன்பு செலுத்தி, வேலை தந்து அழகு பார்க்கிறார்கள். கொடுக்கும் வேலையை நாங்களும் சலிக்காமல் திறம்பட செய்துகொடுக்கிறோம். அதனால் எங்கள் மீது அவர்களுக்கு நன்மதிப்பு உருவாகியிருக்கிறது.

    பீகார் மாநிலத்தை சேர்ந்த சர்வன்குமார்:-

    நான் 6 ஆண்டுகளாக சென்னையில் தங்கி ஓட்டலில் பணிபுரிந்து வருகிறேன். ஆரம்பத்தில் சாதாரண ஆளாகவே வந்தேன். இப்போது மாஸ்டர் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன். வேலையை நன்றாக கற்றுக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இங்கு சூழல் இருக்கிறது. எனக்கு நாளொன்றுக்கு ரூ.1,100 சம்பளம் கிடைக்கிறது. கடை விடுமுறையை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தவறாமல் வேலைக்கு செல்வேன். கடைக்காரரும் என்னை கனிவோடு பார்த்து கொள்கிறார். நான் சம்பாதித்த பணத்தில் சொந்த ஊரில் இடம் வாங்கி இருக்கிறேன்.

    சென்னையில் உள்ள பீகார்வாசிகள் நலச்சங்கத்தை சேர்ந்த ஆசிஷ்குமார் கூறியதாவது:-

    பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே வசித்து வருகிறார்கள். கட்டுமான தொழிலில் தொழிலாளியில் இருந்து, மத்திய அரசு பணியில் அதிகாரி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என ஏராளமானோர் இருக்கிறார்கள். நாங்கள் 3-வது தலைமுறையாக சென்னையில் வசித்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை எந்த பிரச்சனையும் நாங்கள் சந்தித்தது இல்லை. யாரும் பீகாரை சேர்ந்தவர்களை துன்புறுத்தி ஒடுக்கவும் இல்லை. தமிழக மக்கள் ஒருதாய் பிள்ளைகளாகவே எங்களை பாவித்து, சகோதரத்துவத்துடன் மிகவும் அன்பாக பழகுகிறார்கள்.

    அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க முன்னாள் தலைவர் எஸ்.ராமபிரபு:-

    பீகார் மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு வட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கட்டுமான வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் குழுவாக சேர்ந்துதான் வருவார்கள். அப்படி வருபவர்களுக்கு கட்டிடப் பணிகள் நடக்கும் இடங்களுக்கு அருகிலோ அல்லது தனியாக ஓரிடத்திலோ தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். தங்குவதற்கு மட்டும் ஏற்பாடு செய்வது இல்லை. உணவுக்கும் தேவையான வசதிகளை நேர்த்தியாக செய்து கொடுக்கிறோம். இதுவரை எந்த புகாரும் அவர்கள் தெரிவித்தது இல்லை. கட்டுமானப் பணிகளுக்காக வரும் இத்தகைய தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சவுகரியமாகவே இருக்கிறார்கள்.

    திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் குஷ்புகுமாரி:-

    எனது கணவர் சந்தோஷ்குமார், கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக நான் திருப்பூர் காட்டுவளவு பகுதியில் சொந்தமாக டீக்கடை வைத்துள்ளேன்.

    எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை செல்கிறது. நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும் எங்களிடம் அன்பாக பழகுகின்றனர். பக்கத்து வீட்டில் உள்ள பெண்களும் அக்காள், தங்கை, அம்மா போன்று பழகி வருகின்றனர். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் வழியில்தான் படிக்கிறார்கள். சொந்த மாநிலத்தை விட இங்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறோம்.

    திருச்சியில் வேலை பார்க்கும் பீகாரை சேர்ந்த கட்டிட தொழிலாளி அகிலேஷ்:-

    பீகாரில் வேலைவாய்ப்பு அதிகமாக கிடையாது. சாதிய பிரச்சனைகளும், ரவுடியிசமும் அங்கு நிறைய உண்டு. அங்கே ஏதாவது வேலை பார்த்தாலும் வருமானம் மிகவும் குறைவு. ஆனால் தமிழ்நாட்டில் அதுபோன்ற எந்த பிரச்சனையையும் நான் கண்டதில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கிறது. உணவு, தங்குமிடம் என அனைத்தும் செய்து கொடுக்கிறார்கள். இங்கு மனநிறைவான வேலை. கைநிறைய சம்பளம் கிடைக்கிறது. எங்களுக்கு அதுவே போதும்.

    மதுரையில் சாலையோரம் ஹெல்மெட் விற்கும் பகராஸ் என்ற வாலிபர் கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்தவரை எங்களுக்கு பாதுகாப்பாக உள்ளது. எங்களுக்கு பிரச்சனை என்றால் சக வியாபாரிகள் ஆதரவாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார்கள். அனைவரும் எங்களுடன் உறவினர் போல் பழகி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் கோபால் குமார் சிங் கூறியதாவது:-

    நான் ராஜபாளையம் பகுதியில் உள்ள உணவகத்தில் 2 ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். இங்கு எந்த பயமும் இல்லாமல் வேலை பார்த்து வருகிறேன். வேலை பார்க்கும் இடத்திலும் எந்த இடையூறும் கிடையாது. எனது உடன் பணி புரியும் தமிழக தொழிலாளர்கள் என்னை சகோதரரை போல் நடத்துகின்றனர். பீகாரைவிட ராஜபாளையத்தில் வேலை செய்து வருவதை மகிழ்ச்சியாக உணருகிறேன்.

    நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த தினேஷ்:-

    நாங்கள் சிலர் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தில் உள்ள நெல்லை மாவட்டத்திற்கு வந்து இங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு இங்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள் பணியாற்றும் நிறுவனம் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. நாங்கள் நலமாக உள்ளோம்.

    நெல்லையில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் வித்யாசாகர்:-

    நாங்கள் கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்ப்பேட்டையில் நடந்து வரும் கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு இங்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் ஊரைச் சேர்ந்த பலர் எங்களுக்கு முன்பாகவே பல மாதங்களுக்கு முன்பு இருந்தே இங்கு வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.

    இவ்வாறு தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் தொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×