என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார் உதவி பெட்டிகள்"

    • புகார் உதவி பெட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் வாரந்தோறும் சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கடுமையான புகார்களாக இருந்தால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

    கேரளாவில் சமீபகாலமாக குழந்தைகள் மீதான கொடூர தாக்குதல் சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக புகார்கள் வருகின்றன. குழந்தையின் ரத்த உறவுகளே இந்த தாக்குதலில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றன. ஆலப்புழாவில் 9 வயது சிறுமி கன்னத்தில் காயத்துடன் பள்ளிக்கு வந்துள்ளார். இது பற்றி விசாரித்த போது அவளை, தந்தை மற்றும் மாற்றாந்தாய் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது.

    இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் குழந்தைகள் நல அதிகாரி விசாரணை நடத்தினார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு சிறுமியின் தந்தை மற்றும் மாற்றாந்தாய் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வீட்டில் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்ளும் மாணவ-மாணவிகளை பாதுகாக்க கேரள அரசு விரைவில் ஒரு சிறப்பு திட்டத்தை தொடங்கும் என கேரள கல்வி மந்திரி சிவன்குட்டி தெரிவித்தார்.

    அதன்படி வீட்டில் உறவினர்களால் துன்புறுத்தப்படும் குழந்தைகள் ரகசிய புகார்களை அளிக்கும் வகையில் பள்ளிகளில் புகார் உதவி பெட்டிகள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த பெட்டியில் புகார் தெரிவிக்கும் குழந்தைகள் தங்கள் பெயரை எழுத வேண்டிய அவசியம் இல்லை. புகார் உதவி பெட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் வாரந்தோறும் சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான புகார்களாக இருந்தால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். மாற்றாந்தாய் மற்றும் மாற்றாந்தந்தையின் பராமரிப்பில் வளரும் குழந்தைகள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

    கடந்த 10 ஆண்டுகளில் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 43 ஆயிரத்து 474 என்றும், இதில் கொல்லப்பட்ட குழந்தைகள் 282 என்றும், இதில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 13 ஆயிரத்து 825 என்றும் வெளியான புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் பள்ளிகளில் புகார் உதவி பெட்டிகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ×