என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்பங்குடி நாகநாத சுவாமி கோவில்"

    • தினமும் ஒருகால பூஜை நடத்தப்படுகிறது.
    • ஆதிகேது தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.

    சோழவள நாட்டில் எண்ணற்ற சிறப்பு வாய்ந்த ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றாக செம்பங்குடி ஆலயமும் திகழ்கிறது. இக்கோவிலின் இறைவன் நாகநாத சுவாமி, அம்பாள் கற்பூரவல்லி தயார். இங்கு ஆதிகேது தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். தோஷங்களில் இருந்து விடுபட சிறந்த தலமாக விளங்கும் இந்த ஆலயத்தை பற்றி இங்கு பார்ப்போம்.


    தல வரலாறு

    அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அதில் கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு பகிர்ந்தளித்தார், மகாவிஷ்ணு. விப்ரசக்தி என்னும் அசுரனுக்கும், இரணியனின் தங்கை சிம்ஹிக்கும் பிறந்தவன் ஸ்வபானு.

    அசுர குலத்தவனான ஸ்வபானு, தேவர் வடிவம் பூண்டு அமிர்தத்தை உண்டான். இதை குறிப்பால் உணர்ந்த சந்திர - சூரியர்கள், அந்த அசுரனின் தலையில் ஒங்கி அடித்தனர். இதனால் அவனது தலை சிரபுரம் என்னும் சீர்காழியிலும், உடல் செம்பாம்பினன்குடி என்னும் செம்பங்குடியிலும் விழுந்தது.

    அமுதுண்டதால் அந்த இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாக மாறின. அவை, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, ஈசனை நோக்கி கடும் தவமிருந்தன. அவர்கள் முன் எழுந்தருளிய சிவனிடம், "அகில உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் வரமும், சந்திர - சூரியரை விழுங்கும் பலமும்" வேண்டும் என வேண்டினர்.

    ஈசன், சூரிய - சந்திரர்கள் உலக உயிர்களுக்கு இன்றியமையாதவர்கள். அவர்கள் இன்றி உலகம் தத்தளிக்கும் என்றார். இருப்பினும், கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் அவர்களை விழுங்கும் திறன் பெற அருள்பாலித்தார். மேலும் இருவருக்கும் கிரக பதவியும் வழங்கினார். அவர்களே ராகு - கேது ஆவர்.


    சிவந்த மனித உடலும், பாம்பின் தலையும் கொண்ட கேதுவின் வடிவம், இங்கு குடி கொண்டதால் இத்தலம் செம்பாம்பினன்குடி ஆனது. இதுவே மருவி செம்பங்குடி என்றாகி உள்ளது. இந்த ஆலயமே ஆதி கேது தலமாக போற்றப்படுகிறது.

    அருணாசலக் கவிராயரின் சீர்காழி தலபுராணத்தில் இப்பதி செம்பாம்பினன்குடி என்றும், கேதுபுரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசர் அருளிய ஆறாம் திருமுறையில், மனித இடர்களைப் போக்கும் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தலத்தை வைப்புத்தலமாக போற்றியுள்ளார்.

    ஆலய அமைப்பு

    ஊருக்கு சற்று ஒதுங்கிய இடத்தில் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. சுற்றிலும் வயல்வெளிகள், ரம்மியமான சூழலில் தோரண வாயிலின் நேராக ஈசனது சன்னிதி அமைந்துள்ளது. விதானத்தில் அம்மையப்பர் தரிசனம் கிடைக்கும்.

    மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து சென்றால் கருவறையுள் சிறிய திருமேனியுடன், ஸ்ரீ நாக நாத சுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆதியில் கேது பூஜித்த லிங்கம் என்பதால் 'கேதீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். பல ஜென்ம நாக தோஷங்களையும் நொடிப்பொழுதில் நீக்கி, பக்தர்களுக்கு சுகத்தை அருள்கிறார்.

    ஆலய வலம் வரும்போது, முறையான கோஷ்ட தெய்வங்களோடு, தனி சன்னிதிகளில் வீற்றிருக்கும் கணபதி, கந்தன் மற்றும் கஜலட்சுமியை வணங்க வேண்டும். சுவாமிக்கு வாம பாகத்தில் அன்னையின் சன்னிதி கிழக்கு முகமாக அமைந்துள்ளது.

    அம்பிகையாக ஸ்ரீ கற்பூரவல்லி சிறிய திருமேனி கொண்டு காட்சி அளிக்கிறார். இவர் 'திரிபுரசுந்தரி' என்றும் அழைக்கப்படுகிறார். ஆதி கேதுவின் சன்னிதி ஆலய வாயு பாகத்தில் தனியாக சிறிய ஆலயமாக அமைந்துள்ளது.


    தினமும் ஒருகால பூஜை நடத்தப்படுகிறது. ஆலய மெய்க்காவலர் உதவியுடன் பகல் வேளைகளில் எப்போது வேண்டுமானாலும் சுவாமி தரிசனம் செய்யலாம். சுவாமிக்கும் -அம்பாளுக்கும் பசும்பாலால் அபிஷேகம் செய்து சிவந்த அல்லி மலர்களால் அர்ச்சனை செய்கின்றனர்.

    நைவேத்தியமாக புளியோதரை செய்து படைக்கின்றனர். இவ்வாறு பிரார்த்தனை செய்தால், முன் ஜென்மங்களில் ஏற்பட்ட நாக தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம். அதோடு சிறந்த அறிவையும், பேராற்றலையும் பெற்றிடலாம் என்பது நம்பிக்கை.

    சிவபக்தியில் சிறந்தும், மோட்ச காரகனாகவும் திகழும் இத்தல ஆதி கேதுவை எமகண்ட வேளையில் அபிஷேகம் செய்து, பல வண்ணங்கள் கொண்ட ஆடையை அணிவித்து, சிவந்த நீர் வகைப் புஷ்பங்களால் அர்ச்சனை செய்து, கொள்ளுப் பொடிசாதம் நைவேத்தியம் படைத்து வழிபட்டு வந்தால், சகலவித பாவங்களில் இருந்தும் விடுபடலாம். சுகபோகங்களோடு, சகல சவுபாக்கியங்களையும் பெற்றிடலாம்.

    அமைவிடம்

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகரில் இருந்து திருமுல்லைவாயில் செல்லும் பாதையில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது செம்பங்குடி.

    ×