என் மலர்
நீங்கள் தேடியது "தேசிய வாக்காளர் தினம்"
- ஜனநாயகத்தை நிலை நாட்ட பல பேர் ரத்தம் சிந்தி இருக்கிறார்கள்.
- உங்களின் வாக்கு நம் ஜனநாயகம் மற்றும் குடியரசை காக்கும்.
சென்னை:
தேசிய வாக்காளர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ''வாக்களிப்பதே சிறந்தது. நிச்சயம் வாக்களிப்பேன்'' என்பதை மையமாக வைத்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் தேசிய வாக்காளர் தின விழா இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசியதாவது:-
நமது நாட்டில், ஜனநாயகம் மிகவும் முதிர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு வாக்காளர்கள் மற்றும் மக்கள் தான் காரணம். இன்று நகரங்களை தாண்டி கிராமங்களில் தான் வாக்கு சதவீதம் அதிகம் உள்ளது.
ஜனநாயகத்தை நிலை நாட்ட பல பேர் ரத்தம் சிந்தி இருக்கிறார்கள்.
பெரிய அதிகாரிகள் அனைவரும் வேலை பளுவுடன் இருப்பீர்கள், ஆனால் உங்களின் ஓய்வு நேரங்களில் தயவு செய்து ஏதாவது பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவைகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
உங்களின் வாக்கு நம் ஜனநாயகம் மற்றும் குடியரசை காக்கும்.
நிச்சயம் வாக்களியுங்கள். பலர் நோட்டாவுக்கா கவாவது ஓட்டு போடுகிறார்கள். வாக்கே செலுத்தாமல் இருப்பவர்களுக்கு மத்தியில் நோட்டாவுக்கு ஓட்டு போடுவதும் ஒரு பங்களிப்பு தான்.
நமது தேர்தல் ஆணையம் மிகவும் அற்புதமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
நமது வாக்கு சதவீதத்தை எந்த நாடும் எட்ட முடியாத இடத்திலேயே உள்ளது.
யாராலும் நமது நாட்டில் நடைபெறும் ஜனநாயக முறையிலான தேர்தலை குறை கூற முடியாது.
நான் ஏன் வாக்களிக்க வேண்டுமென நினைப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த டிஜிட்டல் யுகத்தில் பலர் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிப்பதை தாண்டி, திசை திருப்புகிறார்கள். மின்னணு எந்திரத்தில் எந்த குறையையும் கூற முடியாது.
யாரும் அதனை நம்பி வாக்களிக்காமல் இருந்து விடக்கூடாது. தேர்தலில் உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள், வாக்களியுங்கள்.
பள்ளி மாணவர்கள் வாக்களிக்கும் உரிமை இல்லாவிட்டாலும், உங்கள் வீட்டில் உங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களை வாக்களிக்க வலியுறுத்துங்கள்.
நீங்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்ற உடன், வாக்காளர் அடையாள அட்டையை பெற்று பெருமை கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை செயலாளர் என்.முருகானந்தம், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநில தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலா சாமி, மாநகராட்சி கமிஷ்னர் குமரகுருபரன், சென்னை மாவட்ட கலெக்டர் ரேஸ்மி உள்ளிட்ட அதிகாரிகள், மாணவ-மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.






