என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலம் உடைந்தது"

    • நேற்று பிற்பகலுக்கு பிறகு கடலூர் சாலையில் போக்குவரத்து சீரானது.
    • பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

    தவளக்குப்பம்:

    ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த 30-ந் தேதி கனமழை பெய்தது. இதன் காரணமாக சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் தண்ணீர் பாய்ந்து சென்றதால், புதுச்சேரி- கடலூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பாகூர் புறவழிச்சாலை வழியாக வாகனங்கள் மாற்றி விடப்பட்டன.

    நேற்று பிற்பகலுக்கு பிறகு கடலூர் சாலையில் போக்குவரத்து சீரானது. இந்தநிலையில் தவளக்குப்பம் அருகே இடையார்பாளையத்தில் உள்ள சிறிய பாலத்தின் மேற்கு பகுதி இணைப்பு சாலை நேற்று இரவு 10 மணியளவில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. அந்த வழியாக கனரக வாகனங்கள் சென்றபோது பாலத்தில் அதிர்வு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த தவளக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பாலத்தின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்தி போக்குவரத்தை தடை செய்தனர்.

    தகவல் அறிந்த முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பாஸ்கர் என்கிற தட்சணாமூர்த்தி எம்.எல்.ஏ., ஆகியோரும் அங்கு வந்து பாலத்தில் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட்டனர். இதையடுத்து பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

    புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் முருங்கப்பாக்கம், வில்லியனூர், உறுவையாறு, பாகூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதேபோல் கடலூரில் இருந்து புதுவை வரும் வாகனங்கள் தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம், வில்லியனூர் வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது.

    நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×