என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழு விசாரணை"

    • சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • முதல் மாடியில் உள்ள உடல் காய தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் எலும்பு முறிவு வார்டில் உள்ள ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவால் திடீரென தீப்பிடித்து மள மளவென எரிந்தது.

    சேலம்:

    சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தீ விபத்து

    இந்த நிலையில் நேற்று தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் முதல் மாடியில் உள்ள உடல் காய தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் எலும்பு முறிவு வார்டில் உள்ள ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவால் திடீரென தீப்பிடித்து மள மளவென எரிந்தது.

    இதனால் அந்த அறை முழுவதும் கரும் புகை சூழ்ந்ததால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து விரைந்து வந்த செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ஆனாலும் ஆஸ்பத்திரியில் ஐ.சி.யு. வார்டு முழுவதும் ஏ.சி. அறையாக உள்ளதால் புகை வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் முதல் மற்றும் 2-ம் மாடியில் உள்ள கண்ணாடிகளை உடைத்து புகை வெளியே செல்ல தீயணைப்பு வீரர்கள் வழி வகை செய்தனர்.

    இதற்கிடையே அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் உதவியோடு சிகிச்சை பெற்று வந்த 55 நோயாளிகளை பாதுகாப்பாக வீல்சேர் மற்றும் ஸ்டெச்சர் மூலம் தீவிர சிகிச்சை பிரிவின் மஞ்சள் பிரிவிற்கு கொண்டு வந்தனர்.

    இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கார்மேகம், பார்த்திபன் எம்.பி. மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். மீண்டும் தீ விபத்து நடந்த அறையினை சீரமைக்கும் முயற்சியில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வாலிபர் பலி

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள சின்னனூரை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி சதீஷ்குமார் (32)விபத்தில் காயம் அடைந்து தீ விபத்து நடந்த அறையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தீ விபத்தால் வேறு வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில் இறந்தார்.

    இதையடுத்து அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இறந்து போன சதீஷ்குமாருக்கு மைதிலி என்ற மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    மேலும் அவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். மருத்துவ மனையில் ஏற்பட்ட தீ விபத்தால் இடமாற்றம் செய்யும் போது உரிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் வேறுஇடத்திற்கு மாற்றியதால் கணவர் உயிரிழந்ததாகவும், இதனால் தனது குடும்ப த்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

    இந்த தீ விபத்து குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் மணி கூறியதாவது-

    அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த எனது தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை இன்று தொடங்கி உள்ளது. விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகைள் தொடரும்.

    தீ விபத்து நடந்த அறையில் ஆபரேசன் செய்ய 40 டேபிள்கள் உள்ளன. இதில் 5 டேபிள்கள் மட்டும் சேதம் அடைந்துள்ளது. இன்று எலும்பு முறிவு சிகிச்சை தொடர்பாக 6 ஆபரேசன் நடைபெறுகிறது. தீ விபத்தால் சேதம் அடைந்த 5 ஆபரேசன் டேபிள்கள் சீரமைக்கப்படுகிறது. விரைவில் அந்த அறைக்கு நோயாளிகள் மாற்றப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.   

    ×