என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலாறு வெள்ளப்பெருக்கு"

    • கோவிலுக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
    • பாலாற்றில் வெள்ளம் குறைந்தபிறகு ஆஞ்சநேயர் கோவில் நடை திறக்கப்பட்டு, அங்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள சண்முகபுரம் பாலாற்றங்கரையில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்து உள்ளது.

    இந்த நிலையில் பொள்ளாச்சி மற்றும் அர்த்தநாரிப்பாளையம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.

    இதன்காரணமாக பாலாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே பாலாற்றின் கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

    மேலும் கோவிலுக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆஞ்சநேயர் கோவில் நடை சாத்தப்பட்டது.

    பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள், பாலாற்றங்கரையில் சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.

    பாலாற்றில் வெள்ளம் குறைந்தபிறகு ஆஞ்சநேயர் கோவில் நடை திறக்கப்பட்டு, அங்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    கோவை கவியருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வால்பாறை சண்முகா எஸ்டேட், சக்தி எஸ்டேட், தலநார் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் வனப்பகுதியில் உள்ள நீரோடைகள் மற்றும் சிற்றாறுகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையிளர் தடை விதித்து இருந்தனர். இந்த நிலையில் ஆழியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது நீர்வரத்து குறைந்து உள்ளது. இதனால் கவியருவியில் தற்போது சீராக தண்ணீர் கொட்டி வருகிறது.

    எனவே சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்தனர். தொடர்ந்து கவியருவிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி வழியாக புறப்பட்டு சென்று அங்குள்ள கவியருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ச்சியுடன் திரும்புவதை பார்க்க முடிந்தது.

    மழையின் அளவு, நீர்வரத்து ஆகியவற்றை பொறுத்து கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். 

    • பாலாறு கரையோரம் இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • பேயாற்றில் இருந்து பள்ளிகொண்டா ஏரிக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது.

    வேலூர்:

    வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆந்திரா எல்லையில் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு கட்டியுள்ள தடுப்பணைகள் முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி தமிழக பாலாற்றில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    திம்மம்பேட்டை, ஆவாரமங்குப்பம், ராம்நாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக செல்லும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் ஆந்திரா எல்லை பகுதியான மாதகடப்பா, வீரனமலை உள்ளிட்ட மலை பகுதிகளிலும் காட்டாற்று வெள்ளம் உருவாகி திம்மாம்பேட்டை மன்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆவரங்குப்பம் வழியாக மழை நீர் பாலாற்றில் கலந்து வழிந்தோடுகிறது.

    இதன் காரணமாக பாலாறு கரையோரம் இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பாலாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் வேலூர் மாவட்டம் செதுவாலை ஏரிக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.

    பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    அதேபோல் பாலாற்றின் கிளை ஆறுகளான குடியாத்தம் கவுன்டண்யா ஆற்றில் இருந்து மோர்தானா அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேயாற்றில் இருந்து பள்ளிகொண்டா ஏரிக்கும் நீர்வரத்து தொடங்கியுள்ளது.

    ஆம்பூர் அருகே வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஒடுகத்தூர் அருகே உள்ள உத்தர காவேரி ஆறு, கணியம்பாடி அருகே உள்ள நாகநதி ஆற்றிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×