என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
- கோவிலுக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
- பாலாற்றில் வெள்ளம் குறைந்தபிறகு ஆஞ்சநேயர் கோவில் நடை திறக்கப்பட்டு, அங்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள சண்முகபுரம் பாலாற்றங்கரையில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்து உள்ளது.
இந்த நிலையில் பொள்ளாச்சி மற்றும் அர்த்தநாரிப்பாளையம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.
இதன்காரணமாக பாலாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே பாலாற்றின் கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
மேலும் கோவிலுக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆஞ்சநேயர் கோவில் நடை சாத்தப்பட்டது.
பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள், பாலாற்றங்கரையில் சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.
பாலாற்றில் வெள்ளம் குறைந்தபிறகு ஆஞ்சநேயர் கோவில் நடை திறக்கப்பட்டு, அங்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கோவை கவியருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வால்பாறை சண்முகா எஸ்டேட், சக்தி எஸ்டேட், தலநார் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் வனப்பகுதியில் உள்ள நீரோடைகள் மற்றும் சிற்றாறுகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையிளர் தடை விதித்து இருந்தனர். இந்த நிலையில் ஆழியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது நீர்வரத்து குறைந்து உள்ளது. இதனால் கவியருவியில் தற்போது சீராக தண்ணீர் கொட்டி வருகிறது.
எனவே சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்தனர். தொடர்ந்து கவியருவிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி வழியாக புறப்பட்டு சென்று அங்குள்ள கவியருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ச்சியுடன் திரும்புவதை பார்க்க முடிந்தது.
மழையின் அளவு, நீர்வரத்து ஆகியவற்றை பொறுத்து கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.






