என் மலர்
நீங்கள் தேடியது "ஆடிட்டர் வீடு கொள்ளை"
- துரைசாமியும், சுப்புலட்சுமி ஈரோட்டில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
- சி.சி.டி.வி. கேமராவில் பதிவான கொள்ளையனின் உருவத்தை அடிப்படையாக வைத்து விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு குமலன்குட்டை கணபதி நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் துரைசாமி (74). ஆடிட்டர். இவரது மனைவி சுப்புலட்சுமி (68). ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர். இவர்களது மகள் ஜனனி. பல் மருத்துவர். ஆஸ்திரேலியாவில் கணவருடன் வசித்து வருகிறார். இதனால் துரைசாமியும், சுப்புலட்சுமி ஈரோட்டில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் துரைசாமி நேற்று ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள அவரது அலுவலகத்திற்கு வழக்கம்போல் சென்று விட்டார். வீட்டில் இருந்த சுப்புலட்சுமி ஈரோடு நாடார்மேட்டில் இவர்களுக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் கட்டிட பணிகளை மேற்பார்வையிடுவதற்காக புறப்பட்டு சென்றார்.
இதைத்தொடர்ந்து துரைசாமியும், சுப்புலட்சுமியும் மதியம் சாப்பாட்டிற்காக சுமார் மதியம் 2.30 மணியளவில் வீட்டிற்கு வந்தனர். எப்போதும் போல வீட்டின் பூட்டினை திறந்து உள்ளே நுழைந்தனர். அப்போது வீட்டிற்குள் உள் அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டும் அதில் இருந்து பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து கணவன்-மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பீரோவை சோதனை செய்தபோது பீரோவில் இருந்த 150 பவுன் நகை திருட்டு போய் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து துரைசாமி வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது சமையல் அறையின் பின்புறம் உள்ள கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது. மர்மநபர் வீட்டிற்குள் நுழைந்து 150 பவுன் நகையையும் கொள்ளையடித்து சென்றதை உறுதி செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் போலீசார் துரைசாமியின் வீட்டிற்கு வந்தனர். மேலும் ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ராஜபிரபு, மோகனசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீஸ் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. வீட்டில் மோப்பம் பிடித்த நாய் வீரா சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டின் சுவர், கதவு, இருக்கைகள் உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்த மர்மநபரின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
துரைசாமியின் வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் நீல நிற சட்டை, ஜீன்ஸ் பேண்ட், தலையில் தொப்பி, முக கவசம், கையுறை (கிளவுஸ்) அணிந்த மர்மநபர் ஒருவர் வீட்டின் பின்பக்கம் சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதிப்பதும், பின்னர் அந்த நபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைவதும், சில நிமிடம் கழித்து ஒரு சிறிய பேக்கில் நகைகளை கொள்ளையடித்து மீண்டும் அதே வழியாக தப்பி சென்றது பதிவானது.
அந்த நபர் காலில் 3 கம்பிகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து கொள்ளையனை பிடிக்கும் வகையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜபிரபு, சோமசுந்தரம், சண்முகம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான கொள்ளையனின் உருவத்தை அடிப்படையாக வைத்து விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர்.






