என் மலர்
நீங்கள் தேடியது "வரத்து குறைவால்"
- மீண்டும் தக்காளி வரத்து குறைய தொடங்கியதால் நேற்று முதல் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியது.
- பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோடு:
தமிழ்நாட்டில் கடந்த சில சில நாட்களாகவே தக்காளி வரத்து குறைந்ததன் எதிரொலியாக தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, ஒட்டன்சத்திரம், கிருஷ்ணகிரி, பல்லடம், ஆந்திரா, பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து 7000 பெட்டிகள் வரை தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு வந்தது.
இதனால் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் 70 வரை விற்பனையானது. பின்னர் மழை, புதிய விளைச்சல் இல்லாத காரணத்தால் தக்காளிகள் வரத்து குறைய தொடங்கியது. குறிப்பாக தாளவாடியில் இருந்து தக்காளி வரத்து குறைய தொடங்கியதால் விலை மெல்ல மெல்ல உயர்ந்து வந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு ரூ.160 -க்கு விற்பனையானது. இதன் காரணமாக பெண்கள் தக்காளி வாங்குவதை குறைத்து கொண்டனர். ஓட்டல் உரிமையாளர்கள் ஓட்டல்களில் தக்காளி சட்னி போடுவதை நிறுத்திவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் தக்காளி வரத்து ஓரளவுக்கு வந்ததால் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனையானது. இதனால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் தக்காளி வரத்து குறைய தொடங்கியதால் நேற்று முதல் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியது. இன்று வ.உ.சி. மார்க்கெட்டிற்கு ஆந்திரா, பெங்களூரில் இருந்து மட்டும் 1000 பெட்டி தக்காளிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதனால் தக்காளி விலை இன்று அதிகரித்து ஒரு கிலோ சில்லரை விற்பனையில் ரூ.150-க்கு விற்பனையானது.
இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளதால் ஓட்டல் உரிமையாளர்களும் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.






