என் மலர்
நீங்கள் தேடியது "போலி டாக்டர்கள் சிக்கினர்"
- நண்பரின் சான்றிதழ் மூலம் உரிமம் பெற்று மருந்தகம் நடத்தி வந்தது தெரிந்தது
- மருந்தகம், தனியார் கிளினிக்குகளுக்கு `சீல்’ வைத்து அங்கிருந்து மருத்துவ உபகரணங்களை குழுவினர் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் மற்றும் கந்திகுப்பம் பகுதிகளில் முறையாக மருத்துவம் படிக்காமல் சிலர் மருந்தகங்களில் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வருவதாக மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிற்கு புகார் வந்தது.
இதனை தொடர்ந்து நேற்று மாலை கந்திகுப்பம், பசவண்ணா கோவில், பர்கூர் மற்றும் ஜெகதேவி பகுதியில் மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கந்திகுப்பம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பசவண்ண கோவில் கிராமத்தில் உள்ள மருந்தகத்தில் ஆய்வு செய்தபோது திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி பாலனாங்குப்பம் பகுதியை சேர்ந்த நதீம் (வயது 25) என்பவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது நண்பரின் சான்றிதழ் மூலம் உரிமம் பெற்று மருந்தகம் நடத்தி வந்தது தெரிந்தது. இவர் அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வந்ததும் கண்டறிந்தனர்.
இதேபோல் பர்கூர் ஜெகதேவி சாலையில் பிளஸ்-2 படித்துவிட்டு, தனியார் கிளினிக் நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மிதுன்குமார் (27) மற்றும் ஜெகதேவியில் பி.காம் படித்துவிட்டு தனியார் கிளினிக் நடத்தி வந்த திருப்பத்தூர் மாவட்டம் குண்டல மலையூர் தோக்கியம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (50) ஆகிய 2 பேரையும் மருத்துவக்குழுவினர் நேற்று மாலை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து மருந்தகம், தனியார் கிளினிக்குகளுக்கு `சீல்' வைத்து அங்கிருந்து மருத்துவ உபகரணங்களை குழுவினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்த நதீம், மிதுன்குமார் மற்றும் கோவிந்தராஜ் உள்ளிட்ட 3 பேரை கந்திகுப்பம் மற்றும் பர்கூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
- 15 ஆண்டுகளாக பேளகொண்டபள்ளியில் மருந்தகம் வைத்து போலி வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.
- 3 பேரையும் மத்திகிரி போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
ஓசூர் பகுதியில், மருத்துவம் படிக்காமல், போலி டாக்டர்கள் வைத்தியம் பார்த்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பரமசிவன் அறிவுறுத்தலின்படி, ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி தலைமையில், மாவட்ட மருந்துக்கட்டுப்பாட்டு அலுவலர் ராஜீவ் காந்தி, வருவாய்த்துறையினர் மற்றும் மத்திகிரி போலீசார், ஓசூர் அருகே பேளகொண்டபள்ளியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மருந்தகம் வைத்து, போலியாக வைத்தியம் செய்து வந்த ஷானிமா (24) என்ற பெணலி டாக்டர் மற்றும் சவுகத் அலி (46) ஆகியோரது மருந்தகங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில், ஷானிமா கஜகஸ்தானில் மருத்துவம் படித்துவிட்டு, இந்தியாவில் தகுதித்தேர்வு எழுதாமல் கடந்த 1 ஆண்டுகளாக பேளகொண்ட பள்ளியில் வைத்தியம் பார்த்து வந்தது தெரியவந்தது.
இதேபோல், ஓசூர் ெரயில்வே நிலைய பகுதியை சேர்ந்த சவுகத் அலி, பார்மசி படிப்பு படித்து, கடந்த 15 ஆண்டுகளாக பேளகொண்டபள்ளியில் மருந்தகம் வைத்து போலி வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.
மேலும், ஓசூர் அருகே கொத்த கொண்டபள்ளியில், சீனிவாஸ் (33) என்பவர் மருந்தகமும், உள்ளே 3 படுக்கை கொண்ட கிளினிக்கையும் வைத்து வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.
இதையடுத்து 3 பேரையும் மத்திகிரி போலீசார் கைது செய்தனர்.மேலும், அவர்களின் மருந்தகத்தில் இருந்த மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 மருந்தகங்களும் சீல் வைக்கப்பட்டது.






