என் மலர்
நீங்கள் தேடியது "தென்னையை தாக்கும்"
- கருந்தலைப் புழுவின் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது.
- கோடை காலங்களில் இதன் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.
கோபி:
தென்னையைத் தாக்கும் கருந்தலைப் புழு மேலாண்மை முறைகள் குறித்து கோபிசெட்டிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி கூறியிருப்பதாவது:
தென்னையைத் தாக்கும் கருந்தலைப் புழுவின் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது. ஆனால் கோடை காலங்களில் இதன் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.
இது அனைத்து வயது மரங்களையும் தாக்கும், இப்புழுக்கள் மரத்தில் அடிப் பகுதிகளில் உள்ள ஓலைகளில் பச்சையத்தை சுரண்டி உண்பதால் மரத்தின் மேற்பகுதியில் உள்ள 3-4 ஓலைகளை தவிர மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்து விடும்.
அதிகமாக தாக்கப்பட்டமரங்கள் தீயினால் எரிந்தது போன்று காணப்படும். தாக்கப்பட்ட ஓலைகளின் அடிப்பகுதியில் செம்மண் நிறத்தில் கூடுகள் காணப்படும்.
இப்புழுக்களை கட்டுப்படுத்த முதலில் தாக்கப்பட்ட ஓலைகளை வெட்டி எடுத்து தீயிட்டு அழித்து விட வேண்டும். குறிப்பாக கோடைக் காலம் தொடங்கும் முன்பே இதை செய்து விடுவது நன்று.
பெத்திலிட் மற்றும் பிரக்கானிட் என்ற குளவி வகை குடும்பங்களை சார்ந்த ஒட்டுண்ணிகளை 1 எக்டருக்கு 3000 என்ற அளவில் இலையின் அடிப் பாகத்தில் விட வேண்டும்.
பிராக்கானிட் ஒட்டுண்ணி கோபி செட்டிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தென்னை ஒட்டுண்ணி வளர்ப்பு நிலையத்தில் கிடைக்கும்.
இது தேவைப்படும் விவசாயிகள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு முன்கூட்டியே பதிவு செய்து ஒட்டுண்ணிகளை வாங்கி பயன்படுத்தி தென்னையைத் தாக்கும் கருந்தலைப் புழுக்களை திறம்பட கட்டுப் படுத்தலாம்.
ரசாயன பூச்சிக் கொல்லிகளை தெளிப்பு செய்திருந்தால் 3 வாரங்கள் கழித்து ஒட்டுண்ணிகளை விட வேண்டும்.
இதன் தாக்குதல் ஒட்டுண்ணிகளால் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரிக்கும் போது டைக்குளோர் வாஸ் 100 இசி அல்லது மாலத்தியான் 50 இசி அல்லது குயினல்பாஸ் அல்லது
பாஸலோன் போன்ற ரசாயனபூச்சிக் கொல்லிமருந்துகளை 1 லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி மருந்து என்ற அளவில் கலந்து இலையின் அடிப்பகுதி நன்கு நனையுமாறு தெளித்து கட்டுப்படுத்தலாம் .
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






