என் மலர்
நீங்கள் தேடியது "Explosion பலி"
- ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துச்சாமி தலைமையிலான வருவாய்த்துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.
- மணிகண்டன் பீடி குடிப்பதற்காக தீயை பற்றவைத்ததால் விபத்து நடந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் வடபருத்தியூர் கிராமத்தில் உடுமலைப்பேட்டையை சேர்ந்த விவசாயி செல்லத்துரை என்பவர் தனது தோட்டத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதற்காக தொழிலாளர்கள் வந்து அங்கே தங்கியிருந்தனர்.
திருப்பூரைச் சேர்ந்த சின்னராஜ் மகன் மணிகண்டன் (வயது 33) என்பவரும் கிணறு தோண்டும் பணிக்காக வந்திருந்தார். இந்த பகுதி பாறைகள் அதிகஅளவு உள்ள இடம் என்பதால் அதனை வெடிக்க வைக்க வெடிபொருட்கள் வைத்திருந்தனர். அந்த வெடிபொருட்கள் அங்கே தற்காலிக பந்தலில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று அந்த வெடிபொருட்கள் இருந்த பந்தலில் மணிகண்டன் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த மணிகண்டன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். தற்காலிக பந்தலும் தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துச்சாமி தலைமையிலான வருவாய்த்துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர். வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததும், அங்கே மணிகண்டன் பீடி குடிப்பதற்காக தீயை பற்றவைத்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் வைத்தது குறித்தும் இதனை எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணிகண்டன் உடல் துண்டுதுண்டாக சிதறியதால் பிரேத பரிசோதனைக்கு கூட அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாமல் அதே இடத்தில் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






