என் மலர்
நீங்கள் தேடியது "நத்தமாடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு"
- பஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
- கம்பீரமான காளைகளைப் பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டி தள்ளின. இதில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே பஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்.அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க திண்டுக்கல், தேனி, மதுரை, பாலமேடு, நத்தம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 503 காளைகள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த காளைகளை திண்டுக்கல் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் திருவள்ளுவன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர் முருகானந்தம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து களம் இறங்க அனுமதிக்கப்பட்டன. இதேபோல் ஆன்லைனில் பதிவு செய்த மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர் அசோக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு கோட்டாட்சியர் பிரேம்குமார் கொடிய சைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.
முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன் பின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகளைப் பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டி தள்ளின.
இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று பிடிபடாத மாடுகள் மற்றும் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு, குத்து விளக்கு, கட்டில், பீரோ, அண்டா, பானை, குடம், குக்கர் உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாட்டின் உரிமையாளர்களான கொசவபட்டியைச் சேர்ந்த ஐசக்ராஜா (வயது 38), அலங்காநல்லூரைச் சேர்ந்த அருணகிரி (16), கொட்டாம்பட்டியைச் சேர்ந்த தனராஜ் (39), பழனியைச் சேர்ந்த மணிவண்ணன் (32),
சிங்கம்புணரியை சேர்ந்த முத்துராஜ் (21), பழனியைச் சேர்ந்த அஜித் (24), மேலூரைச் சேர்ந்த அழகுராஜ் (23), பார்வையாளரான தாராபுரத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (43), மஞ்ச நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வீர கருப்புசாமி (21) உட்பட 15 பேர் காயமடைந்தனர். இதில் மணிவண்ணன் கருப்புசாமி ஆகிய 2 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






