என் மலர்
நீங்கள் தேடியது "சேவல்கள் விற்பனை"
+3
- ஈரோடு மாவட்டத்தில் சிலர் கட்டுசேவல் வளர்ப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்.
- சேவல்களுக்கு சண்டை விடப்பட்டு வியாபாரிகள் சேவல்களை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
கவுந்தப்பாடி:
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் விற்பனை களை கட்டி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பஸ் நிலையம் பகுதியில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வளர்க்கப்படும் கட்டுசேவல்கள், நாட்டு சேவல், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
இந்த கோழிகளை வாங்க ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள், வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள்.
இந்த சந்தையில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை 3 மணி நேரம் மட்டுமே இந்த கட்டு சேவல் சந்தை நடைபெறும். சுமாராக வாரந்தோறும் ரூ.10 லட்சம் அளவுக்கு கட்டு சேவல் விற்பனை நடைபெறும். ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 3 வாரமாகவே சேவல் விற்பனை அதிகரித்தது.
ஈரோடு மாவட்டத்தில் வல்லூறு, பூதி, கீரி, காகம், மயில், செங்கருப்பு, பொறிவெள்ளை, வெள்ளை உள்ளிட்ட ஏராளமான கட்டுசேவல்களை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். சுமார் 8 மாதம் முதல் 10 மாதம் வரை நன்கு பராமரித்து விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
நேற்று இரவு முதல் சந்தைக்கு கட்டுசேவல்கள் அதிகளவில் கொண்டு வரப்பட்டது. இதேபோல் சேவல் சண்டை பிரியர்களும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, மங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர்.
அவர்கள் கட்டுசேவல்களை சண்டைவிட்டு பார்த்து தேர்வு செய்தனர். இன்று ஒரு கட்டுசேவல் குறைந்தது ரூ.4 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் விற்பனை ஆனது. ஆந்திரா, கர்நாடக வியாபாரிகள் கட்டுசேவல்களை அதிகளவில் வாங்கி பெரிய மூங்கில் கூடைகளில் போட்டு தண்ணீர் நனைத்த சாக்கு பையால் மூடி அவற்றை ரெயில் மூலம் கொண்டு சென்றனர்.
இதேபோல் பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான வாலிபர்களும் கட்டுசேவல்கள் வாங்க அதிகாலையில் இருந்தே திரண்டு இருந்தனர். இதனால் சந்தையில் இன்று கூட்டம் அலைமோதியது.
ஈரோடு மாவட்டத்தில் சிலர் கட்டுசேவல் வளர்ப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். கருவாடு, கொண்டைக்கடலை, கம்பு, சோளம், பொட்டுக்கடலை மற்றும் சத்தான தீவணங்களை போட்டு நன்கு பராமரித்து வளர்த்து வருகின்றனர். இதனால் மற்ற இடங்களை விட இந்த கவுந்தப்பாடி சந்தையில் கட்டுசேவல்கள் தரமானதாக இருக்கும். எனவே இவற்றை வாங்க பல்வேறு இடங்களில் இருந்தும் வியாபாரிகள், கட்டுசேவல் பிரியர்கள் வருவார்கள்.
தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் இன்று சந்தைக்கு அதிகளவில் கட்டுசேவல்கள் கொண்டு வரப்பட்டது. சேவல்களுக்கு சண்டை விடப்பட்டு வியாபாரிகள் சேவல்களை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி, அந்தியூர், ஆப்பக்கூடல், பி.மேட்டுப்பாளையம், சிறுவலூர் ஆகிய பகுதிகளில் தை மாதம் பிறந்த முதல் நாளில் இருந்தே சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம். எனவே ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இன்று அதிகளவில் கட்டுசேவல்களை வாங்கி சென்றனர்.
இன்று நடந்த சந்தையில் காலை 6 மணி முதல் 9 மணி வரை சுமார் 3 மணி நேரத்தில் ரூ.50 லட்சத்துக்கு கட்டுசேவல்கள் விற்பனையாகி உள்ளது. அதோடு இல்லாமல் நாட்டு கோழிகளும் அதிகளவில் விற்பனையாகி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






