என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நில ஆக்கிரமிப்பு"

    • 2004-ம் ஆண்டில் சம்பந்தப்பட்ட நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்கியதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.
    • நிலத்தை சர்வே செய்து, சட்டப்படி ஆக்கிரமிப்பை அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த பாட்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எங்கள் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பட்டமுடையார் சாஸ்தா கருப்பசாமி கோவில் உள்ளது. எங்கள் கிராமத்தினர் பெரும்பாலானவர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம், இதன் அருகில் உள்ளது. கோவில் திருவிழா நேரங்களில் இந்த பகுதியை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் இந்த நிலத்தின் அருகில் இலவச பட்டா மனை தனிநபருக்கு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது தனிநபர்கள், கோவில் நிலத்தையும் ஆக்கிரமித்து கழிப்பறை, மாட்டு கொட்டகை உள்ளிட்ட தங்களின் சொந்த நிலத்தை போல கட்டிடம் கட்டி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கோவில் வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுகின்றன.

    மேலும் இந்த நிலத்தின் வழியாகத்தான் இறந்தவர்களின் இறுதிச்சடங்குகள் நடத்துவதற்கு செல்லும் பாதையாகவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தனிநபர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு ஒப்படைக்கும்படி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிராம மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு ஒப்படைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணை முடிவில், 2004-ம் ஆண்டில் சம்பந்தப்பட்ட நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்கியதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. எனவே இதன் அடிப்படையில் மனுதாரர் புகாரை தென்காசி மாவட்ட கலெக்டர் பரிசீலிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு இருந்தால் அனைத்து தரப்பினரும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி, அந்த நிலத்தை சர்வே செய்து, சட்டப்படி ஆக்கிரமிப்பை அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ×