என் மலர்
நீங்கள் தேடியது "இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு"
- போர்க்கால அடிப்படையில் வேட்டி, சேலை உற்பத்தி திட்டத்திற்கு 25 சதவீதம் கூலி உயர்வை வழங்க வேண்டுகிறோம்.
- இந்த கூலி உயர்வின் மூலம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மற்றும் விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரமும் மேம்பட வழிவகை செய்யும்.
ஈரோடு:
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் சார்பில் பொங்கல் அன்று பொது மக்களுக்கு இலவசமாக கொடுக்க தமிழகத்தில் உள்ள 228 விசைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம் மூலம் 65 ஆயிரம் விசைத்தறிக்கும் மேல் இந்த வருடம் ஒரு கோடி சேலையும், ஒரு கோடியே 20 லட்சம் வேஷ்டியும் உற்பத்தி செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அக்டோபர் 2-ம் வாரத்தில் இருந்து வேட்டி உற்பத்தி தொடங்கி, நவம்பர் முதல் வாரத்தில் இருந்து சேலை உற்பத்தி தொடங்கி ஈரோடு, திருச்செங்கோடு, திருப்பூர் மற்றும் கோவை சரகங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் மொத்த உற்பத்தியில் 80 சதவீதத்துக்கு மேல் ஈரோடு மற்றும் திருச்செங்கோடு சரகங்களில் பெரும்பாலான விசைத்தறிகள் மூலம் பிரதான தொழிலாக 4 முதல் 5 மாதத்திற்கு உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதத்தை நம்பி கொண்டு உள்ளார்கள்.
விசைத்தறி நலனுக்காக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 500 யூனிட் மின்சாரம் இலவசம் என்று விசைத்தறிவுகளுக்கு வழங்கி நெசவாளர்களின் துயர் துடைத்து, தற்போது 750 யூனிட் இலவசமாக உள்ளதை ஆயிரம் யூனிட் இலவசமாக கொடுக்கப்படும் என்று 2021 தேர்தல் அறிக்கையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டபலின் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு விசைத்தறிக்கான மின் கட்டணத்தை 31 சதவீதம் உயர்த்தி மேலும் நிலை கட்டணம் ஆகிய வற்றையும் உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் சராசரி 20 தறி வைத்திருக்கும் விசைத்தறியாளர்கள் எடுத்துக்காட்டாக ஒரு விசைத்தறிக்கு இரண்டு மாதத்திற்கு ரூ.800 முதல் 1000 வரை மின் கட்டணம் தற்போது உயர்ந்துள்ளது.
மின் கட்டண உயர்வு காரணத்தால் விசைத்தறிக்கான உதவி பாகங்கள் மற்றும் விசைத்தறி சம்மந்தமான ஆசாரி மற்றும் லேத் சம்பந்தப்பட்ட வேலைப்பாடு கூலிகள் அனைத்தும் 30 சதவீதம் வரை உயர்த்தி உள்ள காரணத்தாலும், தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி திட்டத்திற்கான செலவுகள் பெரிதும் உயர்ந்துள்ளது.
மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் தொழிலாளர்கள் கூலி உயர்வு பெரிதும் உயர்ந்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு அரசு கூலி உயர்வு அறிவித்தபடி தற்போது வேட்டி 24 ரூபாயும் மற்றும் சேலை உற்பத்திக்கு 43 ரூபாயும் கடந்த 3 வருடமாக பெற்று வருகிறோம். மேலும் எங்களிடம் பணி செய்யும் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாழ்வா தாரத்தை மேம்பாட்டை பொருத்து அவர்களுக்கும் கடந்த 3 வருடங்களில் கூலி மற்றும் சம்பளங்களை உயர்த்தி உள்ளோம். கடந்த 3 வருடமாக வேட்டி சேலை உற்பத்திக்கான கூலி உயர்வு வழங்கவில்லை.
தற்போது தமிழக அரசின் வேட்டி, சேலை உற்பத்தி செய்வதன் மூலமாக விசைத்தறியாளர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் முதல்-அமைச்சர் போர்க்கால அடிப்படையில் வேட்டி, சேலை உற்பத்தி திட்டத்திற்கு 25 சதவீதம் கூலி உயர்வை வழங்க வேண்டுகிறோம்.
இந்த கூலி உயர்வின் மூலம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மற்றும் விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரமும் மேம்பட வழிவகை செய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






