என் மலர்
நீங்கள் தேடியது "களையிழந்த அய்யலூர் சந்தை"
- கடந்த மாதம் வரை விறுவிறுப்பாக நடந்து வந்த ஆட்டுச்சந்தை இந்த வாரம் களையிழந்து காணப்பட்டது.
- ஆடுகள் விலை குறைந்து விற்பனையான போதிலும் இறைச்சி கடைகளில் ஆடு மற்றும் கோழி இறைச்சி விலை குறையாமல் அதேபோல் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, கோழி சந்தை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இங்கு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் வரை விறுவிறுப்பாக நடந்து வந்த ஆட்டுச்சந்தை இந்த வாரம் களையிழந்து காணப்பட்டது. பெரும்பாலான மக்கள் விவசாயிகளிடம் நேரடியாகவே ஆட்டுக்குட்டிகளை வாங்கிச்சென்றனர். தற்போது ஆடுகள் குட்டி ஈன்றுவரும் காலமாகும். இதனால் 3 ஆட்டுக்குட்டிகள் ரூ.10ஆயிரம் வரை விலைபோனது.
சாதாரணமாக 3 குட்டிகள் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையாகும். ஆனால் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் இறைச்சி விற்பனை குறைந்துள்ளது. இதனால் ஆடுகளின் விலையும் பாதிக்கு பாதியாக குறைந்து விற்பனையானது. இதேபோல பிராய்லர் கோழிகள் ரூ.170முதல் விற்பனையானது. நாட்டுக்கோழிகள் ரூ.220 முதல் ரூ.300 வரை விற்கப்பட்டது.
பனிக்காலங்களில் பிராய்லர்கோழிகளுக்கு நோய்கள் ஏற்பட்டு வருவதால் நாட்டுக்கோழிகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச்சென்றனர். ஆடுகள் விலை குறைந்து விற்பனையான போதிலும் இறைச்சி கடைகளில் ஆடு மற்றும் கோழி இறைச்சி விலை குறையாமல் அதேபோல் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு மாதத்திற்கு இதேநிலையில் தான் விற்பனை இருக்கும் என்பதால் பெரும்பாலான வெளியூர் வியாபாரிகள் சந்தைக்கு வருவதை நிறுத்திவிட்டனர்.






