என் மலர்
நீங்கள் தேடியது "பாதயாத்திரை போராட்டம்"
- ஓடைப்பட்டியில் விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் நாளை சின்னமனூரில் இருந்து தேனி வரை விவசாயிகள் பாதயாத்திரை செல்லும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
- காய்கறி மொத்த மார்க்கெட், வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிடமும் விவசாயிகள் ஆதரவு கேட்டுள்ளனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை உள்ள 14707 ஏக்கர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியாகும். இங்கு இருபோக நெல்சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு முல்லைபெரியாற்றின் நீரையே பெரிதும் நம்பியுள்ளனர். சின்னமனூர் கிழக்கில் முத்துலாபுரம், ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், அப்பிபட்டி, தென்பழனி, காமாட்சிபுரம், எரசை, கன்னிசேர்வைபட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு நிலத்தடி நீர் முழுவதும் வற்றியதால் முல்லைபெரியாற்று அருகே உள்ள நிலங்களில் போர்வெல் அமைத்து குழாய்கள் மூலம் தோட்டங்களுக்கு கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் சுமார் 3000 ஏக்கரில் பயிர்சாகுபடி செய்யப்படுகின்றன.
கடந்த 2014-ம் ஆண்டு இதற்கு அரசிடம் அனுமதி பெறப்பட்டது. 2018-ம் ஆண்டு தனிநபர் தொடர்ந்த வழக்கால் குறிப்பிட்ட 5 பேர் தண்ணீர் கொண்டு செல்ல மதுரை ஐகோர்ட்டு கிளை இடைக்கால தடை விதித்தது. அந்த உத்தரவில் தண்ணீர் கொண்டுசெல்லும் குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிடவில்லை என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் 42 விவசாய பகிர்மான குழாய் லைன்களை துண்டித்துள்ளனர். இதனால் கடந்த 3 மாதங்களாக 3000 ஏக்கர் பயிர்கள் தண்ணீரின்றி கருகியது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்ததாக தெரிவித்தனர். கடந்த வாரம் ஒருங்கிணைந்த விவசாய சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சின்னமனூரில் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஓடைப்பட்டியில் விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் நாளை சின்னமனூரில் இருந்து தேனி வரை விவசாயிகள் பாதயாத்திரை செல்லும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனால் ஓடைப்பட்டியில் தோட்ட வேலைகள், காய்கறிகள் மார்க்கெட்டுகளுக்கு அனுப்புவதும் நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாமல் கடைகள் அடைக்கப்படுகின்றன.
மேலும் இங்குள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்களை நடத்தாமல் புறக்கணிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சின்னமனூரில் உள்ள காய்கறி மொத்த மார்க்கெட், வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிடமும் விவசாயிகள் ஆதரவு கேட்டுள்ளனர்.






