என் மலர்
நீங்கள் தேடியது "முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு"
- மருதாநதி அணையில் இருந்து முதல்போக சாகுபடி பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் இ.பெரியசாமி இன்று திறந்து வைத்தார்.
- விவசாயிகள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என கூறினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே அய்யம்பாளையம் மருதாநதி அணையில் இருந்து முதல்போக சாகுபடி பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் இ.பெரியசாமி இன்று திறந்து வைத்தார்.
கலெக்டர் விசாகன், வேலுச்சாமி எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி மருதாநதி அணையில் இன்று முதல் 30 நாட்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு 70 கன அடியும், பழைய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு 20 கன அடியும் ஆக மொத்தம் நாளொன்றிற்கு 90 கன அடிக்கு மிகாமலும் மற்றும் மீதமுள்ள 90 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டிற்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 20 கன அடிக்கு மிகாமலும் 120 நாட்களுக்கு முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 6,583 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதன்படி, ஆத்தூர் வட்டத்தில் அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி ஆகிய பகுதிகளில் 5943 ஏக்கர் நிலங்களும், நிலக்கோட்டை வட்டத்தில் சேவுகம்பட்டி. கோம்பைபட்டி ஆகிய பகுதிகளில் 640 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.
மேலும் மருதாநதி அணை அய்யம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. மருதாநதி அணையிலிருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், விவசாயிகள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என கூறினார்.






