என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைணவ கோவில்கள்"

    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் செப்டம்பர் 25-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
    • 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2025-2026ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் கோவில்களுக்கு புரட்டாசி மாதத்தில் தொடங்க இருக்கும் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் மக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருவதோடு, பல்வேறு கோவில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரும்விருப்பமாகவும் கொண்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு 2025-2026-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, "புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் கோவில்களுக்கு ஆண்டுதோறும் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 1,000 பக்தர்களை ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லும் திட்டம் கடந்த ஆண்டு முதல் அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசு நிதியில் 2,000 பக்தர்கள் வைணவத் கோவில்களுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் கோவில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் 2 ஆயிரம் பக்தர்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

    புரட்டாசி மாத வைணவத் கோவில்களுக்கான ஆன்மிகப் பயணமானது 4 கட்டங்களாக, அதாவது செப்டம்பர் 20, 27-ந்தேதி மற்றும் அக்டோபர் 4, 11-ந்தேதி ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் இருந்து தொடங்கப்பட உள்ளன.

    இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடம் இருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் கார்டு நகல் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆன்மிகப் பயணத்திற் கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் செப்டம்பர் 25-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஆகவே, புரட்டாசி மாதத்தில் வைணவத் கோவில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆடி மாதம் பிரசித்த பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத் துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலெட்சுமி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில் "தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவ கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத் துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்" என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், கடந்த ஆடி மாதம் பிரசித்த பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத் துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து, புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு குறைந்த கட்டணத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி, சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிகச் சுற்றுலாவிற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிகச் சுற்றுலாவினை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் எம். மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலெட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    இரண்டாவது திட்டத்தில் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த இரண்டு திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு, கோவில் பிரசாதம், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆன்மிகச் சுற்றுலாவானது பக்தர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
    • ஆன்மிகச் சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருகின்றனர். பல்வேறு கோவில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெருவிருப்பமாகக் கொள்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, தமிழத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து வருகிற புரட்டாசி மாதம் பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

    2022-2023-ம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் "தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவத் கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத் துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்" என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக கடந்த ஆடி மாதம் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து, வருகிற புரட்டாசி மாதம் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு வைணவ கோவில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தல சமய பெருமாள் கோவில், சிங்கப்பெமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மர் கோவில், திருநீர்மலை நீர் வண்ண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

    சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீரராகவபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புத்தூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு 2-வது பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    திருச்சியிலிருந்து உறையூர் அழகிய மணவாள பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், உத்தமர்கோவில், புருஷோத்தம பெருமாள் கோவில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசல பெருமாள் கோவில், தான்தோன்றி மலை கல்யாண வெங்கடராம பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், தஞ்சாவூரிலிருந்து திரு கண்டியூர் சாபவிமோச்சன பெருமாள் கோவில், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோவில், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் பெருமாள் கோவில், நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில், திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில், வடுவூர் கோதண்டராம சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

    மதுரையிலிருந்து அழகர் கோவில் கள்ளழகர் கோவில், ஒத்தகடை ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் கோவில், திருமோகூர் காளமேக பெருமாள் கோவில், திருகோஷ்டியூர் சவும்ய நாராயண பெருமாள் கோவில், மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த ஆன்மிகச் சுற்றுலாவானது பக்தர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலும், பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோவில் பிரசாதம், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும்.

    இந்த ஆன்மிகச் சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

    மேலும், இது தொடர்பாக விவரங்களுக்கு www. ttdconline.com என்ற சுற்றுலாத்துறை இணைய தளத்திலும், 044 25333333, 25333444 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். ஆகவே, ஆன்மிக அன்பர்கள், சுற்றுலா பயணிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×