என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரூர் மாவட்டம்"

    கரூர் மாவட்ட மகளிர் அம்மா இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    கரூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ், கிராமப்புற மற்றும் நகர்புறத்தில் பணிக்கு செல்லும் மகளிர்களுக்கு 2018-19-ம் ஆண்டுக்கான அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற கரூர் மாவட்டத்தில் வசிப்பவராகவும், 18 முதல் 40 வயது வரை உள்ள பணிக்கு செல்லும் (அ) சுய தொழில் புரியும் இருசக்கர ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரையுள்ள மகளிர் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்பத்திற்கு ஒரு பயானாளி மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளி மகளிர், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர், மகளிர்களை குடும்ப தலைவராக கொண்ட மகளிர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற 18-ந்தேதி மாலை 5 மணி வரை கரூர் மாவட்டத்திலுள்ள நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். 2017-18-ம் ஆண்டில் ஏற்கெனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் 2018-19-ம் ஆண்டிற்கு விண்ணபிக்க தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகி கேட்டு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2019 சிறப்பு சுருக்க முறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று வெளியிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 2019-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (நேற்று) வெளியிடப்பட்டு கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை வைக்கப்படவுள்ளன.

    மேலும் வருகிற 8, 22-ந் தேதிகள் மற்றும் அக்டோபர் மாதம் 6, 13-ந் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டங்களிலும் வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வருகிற 9, 23, மற்றும் அக்டோபர் மாதம் 7, 14-ந் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடை பெறவுள்ளன.

    மேலும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 250 வாக்குச்சாவடி மையங்களும், 159 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கரூர் சட்டமன்ற தொகுதியில் 261 வாக்குச்சாவடி மையங்களும், 94 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 253 வாக்குச்சாவடி மையங்களும், 195 வாக்குச்சாவடி அமைவிடங்களும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 267 வாக்குச்சாவடி மையங்களும், 160 வாக்குச்சாவடி அமைவிடங்களும் என மொத்தம் 1,031 வாக்குச்சாவடி மையங்களும், 608 வாக்குச்சாவடி அமைவிடங்களும் உள்ளன.

    பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது நிறைவடைந்த, வாக்காளர்களாக பதிவு செய்யாத தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். நேற்று முதல் அடுத்த மாதம் அக்டோபர் 31-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக் களை அளிக்கலாம்.

    மேலும் http://www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி (கரூர்), லியாகத் (குளித்தலை), தேர்தல் வட்டாட்சியர் விஜயகுமார், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    கரூர் மாவட்டத்தில் பூக்கள் விலை வீழ்ச்சியடைந்ததால் பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நடையனூர், முத்தனூர், கவுண்டன்புதூர், சேமங்கி, மரவாப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி, முல்லைப்பூ, செண்டுமல்லி, அரளி, செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா, கோழிக்கொண்டைப்பூ போன்ற வகைகளையும், மருவு, துளசி  போன்ற தழை வகைகளையும் பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் பூக்கும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து லேசான கோணிப்பைகளில் போட்டுவைக்கின்றனர். பூக்களை வேலாயுதம்பாளையம், கொடுமுடி, பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், பரமத்தி தண்ணீர்பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கிச்சென்று பூக்களை கட்டி முழம் கணக்கிற்கு விற்பனை செய்கின்றனர். 

    கடந்த வாரம் குண்டு மல்லி பூ ஒரு கிலோ ரூ.400-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், அரளி ரூ.80-க்கும், சம்மங்கி ரூ.70-க்கும், செவ்வந்தி ரூ.60-க்கும், ரோஜா ஒரு கிலோ ரூ.130-க்கும், கோழிக்கொண்டை ஒரு கட்டு ரூ.10-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.10-க்கும், ஆடாதுடை ஒரு கட்டு ரூ.10-க்கும் வாங்கி சென்றனர். 

    நேற்று குண்டுமல்லி பூ ஒரு கிலோ ரூ.200-க்கும், முல்லைப் பூ ரூ.200-க்கும், அரளி ரூ.60-க்கும், சம்மங்கி ரூ.50-க்கும், செவ்வந்தி பூ ரூ.50-க்கும், ரோஜா ஒரு கிலோ ரூ.90-க்கும், கோழிக்கொண்டை ஒரு கட்டு ரூ.6-க்கும், ஆடாதுடை ஒரு கட்டு ரூ.5-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.5-க்கும் வாங்கிச்சென்றனர். பூக்கள் விலை வீழ்ச்சியடைந்ததால் பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    ×