search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்தினாம்பாள்"

    திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலைக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மீதான பற்று காரணமாக 85 வயதான பாட்டி திருக்குவளையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.
    சென்னை:

    சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று நலிவுற்று இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனால், தமிழகம் முழுவதும் ஒருவித பதற்றநிலை தொற்றிக்கொண்டது. மருத்துவர்களின் கண்காணிப்பில் கருணாநிதி இருந்து வருவதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று, விடிய விடிய கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் வெளியே தொண்டர்கள் கூடி நின்று கொண்டு ‘தலைவர் வாழ்க’ என கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். பல்வேறு கட்சியின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் விசாரித்து சென்றனர்.

    கோபாலபுரத்தில் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள தெருவில் போலீசார் தடுப்புகள் அமைத்து கூட்டம் கூடுவதை தடுத்து வருகின்றனர். எனினும், பலர் அங்கு காத்துக்கொண்டு இருக்கின்றனர். காலை 11 மணி அளவில் கூட்டத்தின் நடுவே இருந்த 85 வயது மூதாட்டி ஒருவர் திருக்குவளையில் இருந்து வருவதாகவும் தனது பெயர் ரத்தினாம்பாள் என்றும் கருணாநிதியை பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.

    இதனை அடுத்து, அங்கு கூடியிருந்த திமுகவினர் பாட்டி வந்த தகவலை சென்னை மாவட்ட செயலாளர் சேகர் பாபுவிடம் தெரிவித்தனர். கருணாநிதியை சந்திப்பதற்காகவே திருக்குவளையில் இருந்து சென்னைக்கு தனியாக வந்ததாக சேகர்பாபு எம்எல்ஏ.விடம் பாட்டி தெரிவித்தார்.



    ‘தலைவர பார்க்கனும்பா டீவியில ராத்திரி பார்த்தேன், ஏதேதோ சொன்னாங்க, மனசு தாங்கல கிளம்பி வந்துட்டேன்… காலையில 10.30 இறக்கி விட்டாங்க அங்கிருந்து கேட்டு கேட்டு பஸ் ஏறி இங்க வந்துட்டேன்’ என்றார் ரத்தினாம்பாள்.

    ‘தலைவரை பாக்கனும்… ஒரு ஓரமா நின்னு பாத்துட்டு போய்டுறேன்… எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதே தலைவர்தான்பா’ என்று கண்ணீரோடு நின்றவரை கண்ட சேகர்பாபு அவரிடம் விசாரித்து உள்ளே அழைத்து சென்று ஸ்டாலினை சந்திக்க வைத்து வெளியே கொண்டு வந்தார்

    ‘தலைவரை பார்க்க முடியல டாக்டர் பார்கறாங்களாம்’ என்று சோகத்தில் வெளியே வந்த ரத்தினாம்பாளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து சேகர்பாபு ஊருக்கு அனுப்பி வைத்தார்.
    ×