என் மலர்
நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ"
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி நகரைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் ரங்காபுரம் பஸ் நிலையம் அருகில் வாடகைக்கு பழைய இரும்பு பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளார்.
இந்த குடோனில் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருந்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு திடீரென குடோனில் தீ பிடித்து எரிந்தது. இதை கவனித்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பற்றி எரிந்தது. அப்போது குடோனில் இருந்த பாட்டில்கள் வெடித்து சிதறியது.
இதனால் ரங்காபுரம் பகுதியில் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்ததால் அங்கிருந்த மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தீயணைப்பு வாகனம் வர தாமதமானதால் ஒரு மணி நேரம் பற்றி எரிந்தது.
சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தை காண ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சர்வீஸ் ரோட்டில் சென்ற அனைத்து வாகனங்களும் மாற்றுபாதையில் திருப்பி விடப்பட்டன.
அதன்பேரில் வேலூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது யாரேனும் முன்விரோதம் காரணமாக சதி வேலை செய்தார்களா? என்ற கோணத்தில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






