search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sirumugai handloom weavers"

    பிரசித்தி பெற்ற சிறுமுகை கைத்தறி ஆடைகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    கோவை:

    தேசிய கைத்தறி நாளையொட்டி பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட கைத்தறி பே‌ஷன் ஷோ இன்று கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வானதி சீனிவாசன் தலைமை வகித்தார்.

    பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு கைத்தறி ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக மேடையில் நடந்து வந்து அசத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.

    பின்னர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மோடி விவசாயத்துக்கு அடித்தபடியாக கைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கைத்தறி ஆடை சுற்றுச்சூழலுக்கு உகந்தது. கைத்தறி ஆடைகளை நாம் பயன்படுத்தினால் அது நெசவாளர்களை ஊக்கப்படுத்தும்.

    கடந்த ஆண்டு 40 கல்லூரிகளில் மக்கள் சேவை மையம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நாம் பயன்படுத்தும் ஆடைகளில் 30 சதவீதம் கைத்தறி ஆடை இருக்க வேண்டும். கைத்தறி ஆடைகளை ஏற்றுமதி செய்ய மோடி அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

    பிரசித்தி பெற்ற சிறுமுகை கைத்தறி ஆடைகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிக்கு இந்துஸ்தான் கல்லூரி செயலாளர் சரஸ்வதி கண்ணையன், நடிகை மாளவிகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×