என் மலர்
நீங்கள் தேடியது "Separate Revenue Village"
- கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தனி வருவாய் கிராமமாக பிரித்து கொடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் புது உச்சிமேடு ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக பிரிக்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தே.மு.தி.க. தியாகதுருகம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா, பா.ம.க. தியாகதுருகம் தெற்கு ஒன்றிய செயலாளர் துரை, வி.சி.க. தியாகதுருகம் தெற்கு ஒன்றிய செயலாளர் கலையமுதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தனலட்சுமி, சுமதி பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டக்குழு உறுப்பினர் ஜக்கரியா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., வி.சி.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சுமார் 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியுள்ளதாவது,
புது உச்சிமேடு ஊராட்சி பழைய உச்சிமேடு, ராமநாதபுரம், பட்டி, புது உச்சிமேடு ஆகிய 4 கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு சுமார் 5000 பேர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி கொங்கராயபாளையம் ஊராட்சியில் இருந்து கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தது. ஆனால் இதுநாள்வரை புது உச்சிமேடு தனி வருவாய் கிராமமாக பிரிக்கப்படாமல் உள்ளது. இதனால் புது உச்சிமேடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொங்கராயபாளையம் ஊராட்சிக்கு சென்று பட்டா, சிட்டா, அடங்கல்கள், சான்றிதழ்கள் மற்றும் பிற அரசு திட்ட அனுமதி மற்றும் பதிவுகளை பெற வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் மற்றும் முதலமைச்சர் தனி பிரிவிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது நாள் வரை தனி வருவாய் கிராமமாக பிரிக்கப்படவில்லை. எனவே புது உச்சிமேடு ஊராட்சி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தனி வருவாய் கிராமமாக பிரித்து கொடுக்க வேண்டும். மேலும் தற்காலிகமாக பொதுமக்கள் சிரமத்தை குறைக்கும் வகையில் வாரத்தில் 3 நாட்கள் புது உச்சிமேடு ஊராட்சியிலும், 3 நாட்கள் கொங்கராயபாளையம் ஊராட்சியிலும் கிராம நிர்வாக அலுவலகத்தை செயல்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.






