search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ropecar Test Run"

    • கொல்கத்தாவில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான புதிய சாப்ட் வரவழைக்கப்பட்டு ரோப்காரில் பொருத்தப்பட்டது.
    • காலை ரோப்காரில் எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.

    இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் சிரமமின்றியும், எளிதாகவும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக அடிவாரத்தில் இருந்து 2½ நிமிடத்தில் மலைக்கோவிலுக்கு செல்லக்கூடிய ரோப் காரையே பெரும்பாலான பக்தர்கள் விரும்பிச் செல்கின்றனர்.

    குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த ரோப்கார் சேவை மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் ரோப்கார் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது.

    அதன்படி கடந்த 19.8.23-ந் தேதி பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பழுதடைந்த உதிரி பாகங்கள் மாற்றப்பட்டது. குறிப்பாக கொல்கத்தாவில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான புதிய சாப்ட் வரவழைக்கப்பட்டு ரோப்காரில் பொருத்தப்பட்டது.

    பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் ரோப்காரில் உள்ள 8 பெட்டிகளுக்கும் புதிய வண்ணங்கள் தீட்டும் பணி நேற்று நடைபெற்றது. இன்று காலை ரோப்காரில் எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டத்தில் போது பெட்டிகள் சீரான முறையில் ஒன்றுடன் ஒன்று மோதாமல் இயங்குகிறதா? என சரி பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை சென்னை ஐ.ஐ.டி. குழுவினரால் பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதா என உறுதி செய்யப்படும். அந்த குழுவினர் சான்றளித்தால் ஓரிரு நாளில் ரோப் கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ×