என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbery attempt at axis bank"

    சென்னை ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கியில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #AxisBank
    போரூர்:

    சென்னை ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆக்சிஸ் வங்கி உள்ளது. இதன் அருகிலேயே ஏ.டி.எம். மையமும் உள்ளது.

    இன்று அதிகாலை மூன்று மணி அளவில் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த மர்மநபர்கள் முதலில் எச்சரிக்கை அலாரம் வயர்களை துண்டிக்க முயன்றனர். அப்போது திடீரென எச்சரிக்கை மணி அடித்தது. இதனால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    வங்கியின் அலாரம் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். வளசரவாக்கம் உதவி கமி‌ஷனர் சம்பத் மற்றும் ராமாபுரம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து வங்கியை ஆய்வு செய்தனர்.

    அப்போது வங்கிக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் ஒரு கேஸ் சிலிண்டர் மற்றும் கேபிள்கள் இருந்தன. எனவே கொள்ளையர்கள் முதலில் ஏ.டி.எம். மையத்தில் உள்ள வங்கி அலாரத்தின் வயரை துண்டித்து கொள்ளையில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது.

    வங்கி மற்றும் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    ஏ.டி.எம். மையத்தில் இருந்த கேமிராவில் கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் புகும் காட்சி பதிவாகி உளளது. ஆனால் அவர்களது முகம் தெரியவில்லை.

    முகத்தை மறைத்தபடி அவர்கள் சென்று வருகிறார்கள். எனவே பல நாட்கள் வங்கியையும், ஏ.டி.எம். மையத்தையும் கொள்ளையர்கள் நோட்டமிட்டு இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

    எனவே வங்கி மற்றும் ஏ.டி.எம். மையத்தில் ஏற்கனவே பதிவான பழைய காட்சிகளை ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    அதில் சந்தேகத்திற்கிடமாக வரும் நபர்களை கண்டறிந்து விசாரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.

    கொள்ளையில் ஈடுபட வந்தவர்கள் வடநாட்டு கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஐ.ஓ.பி. வங்கியில் கேஸ் சிலிண்டர்கள் மூலம் கம்பிகளை உடைத்து நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. #AxisBank
    ×