search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "resistor Troubleshooting Center"

    நாமக்கல்லில் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையத்தை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள துணைமின் நிலைய வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மைய திறப்பு விழா நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில், கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்து மின் பயனீட்டாளர்கள் அளிக்கும் புகார்கள் கணினி மூலம் பதிவு செய்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டார்.

    பின்னர் அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு மண்டல தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உட்பட்ட நாமக்கல் மின்பகிர்மான வட்டத்திற்கு என பிரத்யேகமான கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையம் புதியதாக அமைக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மின் பகிர்மான வட்டமானது நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், மற்றும் பரமத்திவேலூர் ஆகிய 4 கோட்டங்களும், 16 உபகோட்டங்களும், 76 பிரிவு அலுவலகங்களும் அடங்கியதாகும்.

    நாமக்கல் மின்பகிர்மான வட்டத்தில் மொத்தம் 6,36,000க்கு மேல் மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். இதில் வீட்டு மின் இணைப்புகள் மட்டும் 4,06,273 ஆகும்.

    நாமக்கல் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அனைத்து மின் பயனீட்டாளர்களும் 24 மணிநேரமும் செயல்படும் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1912 அல்லது 180042519124 (அனைத்து வாடிக்கையாளர்கள்)-ஐ தொடர்பு கொண்டு தங்களது மின்தடை பழுதுகளை சரி செய்து கொள்ளலாம். மின் பயனீட்டாளர்கள் மேற்கண்ட இலவச மின்சாரவாரிய சேவையை உபயோகித்து பயன்பெற வேண்டும். மின்தடை பழுது புகார்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விரைந்து சரிசெய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மைய சேவை குறித்த துண்டு பிரசுரங்களை அமைச்சர் பி. தங்கமணி பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளர் சந்திரசேகர், நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சந்தானம் உள்பட அனைத்து பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    ×