என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Renovated work"

    • நெல்லையில் 8-ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆண்ட காலத்தில் பாளையங்கோட்டையில் கோட்டை அமைத்து ஆட்சி நடத்தினார்கள்.
    • இங்கு தான் ஊமைத்துரையை சிறை வைத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லையில் 8-ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆண்ட காலத்தில் பாளையங்கோட்டையில் கோட்டை அமைத்து ஆட்சி நடத்தினார்கள்.

    அதன்பின் பாளையக்காரர்களும், தொடர்ச்சியாக ஆங்கிலேயர்களும் இந்த கோட்டையை நிர்வாக அலுவலகமாகவும், அதன் ஒரு பகுதியை சிறையாகவும் பயன்படுத்தி வந்தனர். இங்குதான் ஊமைத்துரையை சிறை வைத்துள்ளனர்.

    இதனால் பல வரலாறு கொண்டுள்ள கோட்டையாக இது உள்ளது. மற்றொரு அடையாளம் பாளையங்கோட்டை பஸ் நிலையத்தின் அருகிலுள்ள கட்டபொம்மன் சிலை பகுதி, மற்றொரு பகுதி பாளையங்கோட்டையில் இருக்கும் அரசு அருங்காட்சியகமாகும்.

    பல வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ள இந்த கோட்டை பழங்கால ஆட்சியின் அடையாளமாக மிஞ்சி நிற்கிறது.

    எஞ்சி இருக்கும் கொத்தளத்தின் மேல் சமீபகாலம் வரை காவல் நிலையம் இயங்கிக் கொண்டிருந்தது. ஏறத்தாழ முப்பது அடி உயரமுள்ள கோட்டைச் சுவரின் மீதான கொத்தளத்தில் அமையப் பெற்றதால் ' மேடை' என்ற அடைமொழி இந்தக் காவல் நிலையத்தோடு ஒட்டிக்கொண்டுவிட்டது.

    கோட்டை பகுதி சிதிலமடைந்து காணப்பட்டதால் பழமை மாறாமல் புனரமைத்து நாளைய சந்ததியினருக்கு தொன்மை அடையாளத்தை பாதுகாத்து வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து மேற்கு கொத்தளம் என அழைக்கப்படும் இந்த கோட்டையின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தின் கீழ் ரூ. 3.6 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணியினை சபாநாயகர் அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தனர்.

    அதன்படி பணிகள் முழுவதும் நிறைவடைந்து மேடை போலீஸ் நிலையம் இருந்த கோட்டை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    கோட்டையின் வரலாற்றை கூறும் ஓவியங்கள் மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதன் வெளிப்புறம் உள்ள புளியமரம் வேம்பு மரங்களை சுற்றி இருக்கைகள், மேலும் மிகப்பெரிய திரையமைத்து நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்ய வசதிகள், அவற்றை பார்க்க சிறியஅளவிலான கான்கிரீட் கேலரிகள், புல்வெளி தரை, மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    புதுப்பொலிவு

    அலங்கார விளக்குகள், படிக்கட்டுகளில் அபிவிருத்தி பணிகள் செய்தல், கழிப்பிட வசதிகள் மேற்கொள்ளுதல் மற்றும் 345 சதுரமீட்டர் அளவிற்கு வரலாற்று பூங்காவிற்கு இடம் ஒதுக்கீடு செய்து பணிகள் போன்ற பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இதனால் தற்போது கோட்டை புதுப்பொலிவு பெற்றுள்ளது. எனவே இதனை பார்வையிட ஏராளமானவர்கள் வருவார்கள் என்பதால் அதற்கு ஏற்ப இப்பகுதியை ஓட்டிய சாலைகளில் கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், உணவகங்கள் செயல்படுவதற்கு ஏற்ப சாலையோர வசதிகள் செய்யப்படுகிறது.

    இதற்காக அங்கிருந்த டிரான்பார்மர் உள்ளிட்ட வைகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யும் பணி ஏற்கனவே நிறைவு பெற்றுள்ளது.

    மாநகர மக்களின் மற்றொரு சிறந்த பொழுது போக்கு மையமாக உருவாகி உள்ள கோட்டை காவல்நிலைய கட்டிடத்தை பாளை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்.  

    ×