search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railyway Station"

    • செய்துங்கநல்லூர் ரெயில் நிலையத்தில் போதிய வசதி இல்லாத காரணத்தினால் இவர்கள் ரெயிலை பயன்படுத்தாமல் 2 கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ் போக்குவரத்தினை பயன்படுத்துகிறார்கள்.
    • அடிப்படை வசதியான கழிவறை வசதி, குடிதண்ணீர் வசதி, இருக்கை வசதி, எதிர்கரையில் மழையின் நனையாமல் பயணிகள் நின்று செல்ல நிழற்குடை வசதி என எதுவும் இல்லை.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை- திருச்செந்தூர் ரெயில் பாதையில் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் மிக முக்கிய ரெயில் நிலையமாகும். இந்த நிலையத்தின் அருகில் 2 பெரிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. கருங்குளம் யூனியன் அலுவலகம், சுமார் 42 கிராம மக்கள் கூடும் பாரம்பரிய மிக்க வாரச்சந்தை, தபால் அலுவலகம், கல்வி நிலையங்கள், கால்நடை மருத்துவமனை உள்பட பல அலுவலகங்கள் உள்ளன.

    செய்துங்கநல்லூரை சுற்றி தென்திருப்பதி என கருதப்படும் கருங்குளம் வெங்கடசலாபதி கோவில், தென்சிதம்பரம் என போற்றப்படும் செய்துங்கநல்லூர் பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் கோவில், தென் திருவரங்கம் எனப்படும் ரெங்கராஜ பெருமாள் கோவில், தென் சீர்காழி எனப்படும் கொங்கராயகுறிச்சி கோவில், தென் காசி எனப்படும் முறப்பநாடு சிவன் கோவில், நவலிங்கபுரங்களான வல்லநாடு, கொங்கராயகுறிச்சி, தெற்குகாரசேரி சிவன் கோவில்களும் உள்ளன.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையத்தில் இறங்கி தான் செல்ல வேண்டியது உள்ளது.

    மேலும் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் 3 பிளாட்பார்ம் கொண்டது. இதில் 2 பிளாட்பார்ம் உள்ளது. இங்கு ஒரு நாளில் 3 முறை கிராசிங் ரெயில் நின்று செல்கிறது. ஆனால் 2-வது பிளாட் பார்மில் எந்தவொரு வசதியும் இல்லை. ரெயில் புல் முளைத்து கிடக்கிறது. தெருவிளக்கு இல்லை. குடிதண்ணீர் மற்றும் கழிவறை வசதியும் உள்ளது. எதிர் பக்கத்தில் உள்ள கல்லூரி மற்றும் சுந்தரபாண்டிய சாஸ்தா கோவிலுக்கு தினமும் பக்தர்களும், மாணவ -மாணவிகளும் வந்து செல்கின்றனர். போதிய வசதி இல்லாத காரணத்தினால் இவர்கள் ரெயிலை பயன்படுத்தாமல் 2 கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ் போக்குவரத்தினை பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த ரெயில் நிலையத்தில் கிராசிங் நேரத்தில் எதிர் பிளாட்பார்ம் போவதற்கு வசதி இல்லை. எனவே ரெயிலை பல சமயங்களில் விட்டு விடும் நிலை உள்ளது. எனவே ஒரு ஓவர் பிரிட்ச் இருந்தால் மக்கள் எறி மறு பிளாட்பார்ம் செல்ல ஏதுவாக இருக்கும்.

    வருங்காலத்தில் தண்டவாளத்தினை உயர்த்த ஏற்பாடு நடைபெற உள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் மிக முக்கிய ரெயில் நிலையமாக மாறி விட்டது. குறிப்பாக நெல்லை மாவட்டம் கே.டி.சி. நகர் உள்பட வளர்ந்து வரும் நகரத்தில் இருந்து கூட அவர்கள் நெல்லை சந்திப்பில் ரெயிலில் முன்பதிவு செய்வதை விட, செய்துங்கநல்லூர் சென்று பதிவு செய்வதையே விரும்பி வருகின்றனர். இதனால் தினமும் 10 ஆயிரத்துக்கு மேல் வசூல் ஆகிறது. ஆனால் அடுத்த கட்டமாக அடிப்படை வசதி இன்றி ரெயில் நிலையம் உள்ளது. எதிர்பிளாட்பார்மில் அடிக்கடி கிராசிங் ரெயில் நிற்கிறது. ஆனால் அங்கு விளக்கு வசதி, பிளாட்பார்ம் இல்லாமல் முள் முளைத்து கிடக்கிறது. எனவே இரவில் இறங்கி நிற்கும் போது பாம்பு போன்ற விஷசந்துகள் கிடக்கும்அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் அடிப்படை வசதியான கழிவறை வசதி, குடிதண்ணீர் வசதி, இருக்கை வசதி, எதிர்கரையில் மழையின் நனையாமல் பயணிகள் நின்று செல்ல நிழற்குடை வசதி என எதுவும் இல்லை. முக்கிய ரெயில் நிலையமாக கருதப்படும் இந்த ரெயில் நிலையத்தில் பிளாட்பார்மை கடக்க ஓவர் பிரிட்ஜ் அமைத்து தர வேண்டும். தென்னக ரெயில்வேயில் திருச்செந்தூர் ரெயில் பாதை வசூலில் 10 இடத்துக்குள் உள்ளது. அதுபோலவே செய்துங்கநல்லூர் ெரயில் நிலையமும் வசூலில் முன்னணி வகித்து வருகிறது. ஆனால் ஆன்மிகத்தலங்கள் இந்த நிலையத்தினை சுற்றி இருந்தும் கூட, ஆன்மிகத்திற்காக திருச்செந்தூர் - பழனியை இணைக்க உருவாக்கப்பட்ட பாலக்காடு ரெயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்வது இல்லை. எனவே அடிப்படை வசதியை செய்து, பாலக்காடு ரெயிலை செய்துங்கநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    தற்போது ஒலிபெருக்கி மூலம் ரெயில் வரும் நேரத்தினை அறிவிக்கும் வசதி, மின்சார ரெயிலுக்காக செய்துங்கநல்லூரில் துணை மின் நிலையம் என பல்வேறு வசதி இருந்தும் கூட பாலக்காடு ரெயில் நிற்காமல் செல்வதும், அடிப்படை வசதி இல்லாமல் இருப்பது இந்த பகுதி பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பாலக்காடு ரெயிலை இந்த கிராசிங் ரெயில் நிலையத்தில் நிறுத்தி, அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கலெக்டர் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

    திருச்செந்தூர் -பழனி ரெயில் ஆரம்ப காலத்தில் செய்துங்கநல்லூரில் நின்று தான் சென்றது. அதன் பிறகு கொரோனா காலத்தில் ரெயில்கள் நிறுத்தப்பட்டு விட்டது. கொரோனா காலத்திற்கு பிறகு அனைத்து ரெயிலும் எக்ஸ்பிரசாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டது. அப்போது செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரெயில்களும் நின்று சென்றது.

    இதற்கிடையில் பழனி ரெயில் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. அப்போது செய்துங்கநல்லூரில் இந்த ரெயில் நிற்கவில்லை. எனவேசெய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர்பார்வதி நாதன் தலைமையில் போராட்டம் நடந்தது. செய்துங்கநல்லூர் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒரு காலகட்டத்தில் இந்த போராட்டம் முற்றுகை போராட்டமாக உருவெடுத்தது. எனவே போராட்டத்தில் ஈடுபடுவர்களை செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்ய திட்டமிட்டனர்.

    அப்போது பொதுமக்களுக்கும், போலீசுக்கும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், வியாபாரிகள் சங்கத்தினர், முஸ்லீம் அமைப்புகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் மாவட்ட கலெக்டர் தலையீட்டு செய்துங்கநல்லூரில் ரெயில் நின்று செல்ல ஏற்பாடு செய்வதாக கூறினார். அதற்கான முயற்சியும் எடுத்தார். ஆனால் தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் தொடர்ந்து செய்துங்கநல்லூர் மக்கள் ரெயில்வே நிர்வாகத்துக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புதல், தங்களுடைய போனில் ஸ்டேட்ஸ் வைத்தல் என போராட்டம் நடத்தினர்.

    இந்த வேளையில் மீண்டும் மதுரை ரெயில்வே மேலாளருக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் செய்துங்கநல்லூரில் மக்கள் நலன் கருதி ரெயிலை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கடந்த வாரம் இந்த கடிதம் மதுரை தென்னக ரெயில்வேக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே விரைவில் செய்துங்கநல்லூரில் பாலக்காடு ரெயில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×