search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puduppai Mariamman Temple"

    • அமராவதி அணைக்கு நீர் பிடிப்பு பகுதிகளாக இடுக்கி மாவட்ட பகுதிகள் உள்ளது‌.
    • அணை முழுமையாக நிரம்பும் நிலையில் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    தாராபுரம்:

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்துள்ளது‌. இந்த நிலையில் அமராவதி அணை நிரம்பும் நிலை எட்டியதை அடுத்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக 12 ஆண்டுகளில் இல்லாத அளவு அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மொத்தம் 90 அடி நீர் தேக்கும் வகையில் 4.04 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாக உள்ளது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகிறது. மேலும் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அமராவதி அணைக்கு நீர் பிடிப்பு பகுதிகளாக இடுக்கி மாவட்ட பகுதிகள் உள்ளது‌.

    வழக்கமாக‌ இந்த அணை தென் மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் தொடங்கியதும் அணை நிறைந்து விடும். இதனால் ஜுன், ஜுலை மாதத்தில் அணையில் உபரி நீர் திறக்கப்பட்டு விடும். தற்போது வடகிழக்கு பருவமழை சில நாட்களாக பெய்து வரும் நிலையில், அணை முழுமையாக நிரம்பும் நிலையில் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    அதேபோல் பழனி மலைத்தொடரில் உற்பத்தியாகும் துணை ஆறுகளாக உள்ள வரதமாநதி, குதிரையாறு, பொறுதலாறு, சண்முகா நதி உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அமராவதி ஆற்றுடன் தாராபுரம் அருகே ஒன்றாக கலக்கிறது. இந்த ஆறுகளில் வந்த தண்ணீருடன் அமராவதி ஆற்றின் உபரி நீரும் சேர்ந்து செல்கிறது. இதன் காரணமாக புதுப்பை அருகே உள்ள மாரியம்மன் கோவிலின் சுற்றுச்சுவரை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. மேலும் கொங்கர் பாளையம் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் கிராம மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.

    இது குறித்து மயில் ரங்கம் பகுதியை சேர்ந்த சின்னுசாமி கூறுகையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இருகரைகளையும் தாண்டி இங்குள்ள கோவில் சுவற்றை தொட்டபடி வெள்ள நீர் சென்றது. தற்போது 12 ஆண்டுகள் கடந்து தற்போது இந்த அளவுக்கு தண்ணீர் செல்வதாக தெரிவித்தார்.

    ×