search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudukottai farmers"

    புதுகோட்டை மாவட்டம் கடைமடைக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் இன்று 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.எல்.ஏ., கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நாகுடிக்கு கல்லணை கால்வாயில் இருந்து விநாடிக்கு 300 கனஆடி வீதம் முறை வைக்காமல் காவிரி நீர் திறந்து விட கோரி நாகுடியில் உள்ள கல்லணை கால்வாய் பிரிவு அலுவலகம் எதிரே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

    இதில் அறந்தாங்கி எம்.எல்.ஏ.வும் தினகரன் ஆதரவாளருமான ரத்தினசபாபதி மற்றும் அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். அப்போது ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் கூட புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை. இது தொடர்பாக கல்லணை கால்வாய் பிரிவு அலுவலர்கள் அளித்த வாக்குறுதியின் படியும் தண்ணீர் வராததால், கலெக்டர் கணேசை சந்தித்து முறையிட்டேன். அவர் கூறியும் தண்ணீர் வராததால் விவசாயிகளோடு சேர்ந்து போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனையில் ஈடுப்பட்டிருந்தேன். அப்போது அங்கு வந்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் வரும் என உறுதி அளித்தார்.

    ஆனால் இதுவரை வந்து கொண்டிருந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டு விட்டது. தண்ணீரை திறந்துவிடாமல் கீழ்நிலை அலுவலர்களை கொண்டு அரசு சமாதானம் செய்யும் முயற்சியை ஏற்கமாட்டோம். தமிழக அரசை ஒருபோதும் நம்பத்தயாராக இல்லை. போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றார்.

    விவசாயிகளின் போராட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று மதியம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து பேசுகின்றனர். #tamilnews
    ×