search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Preference for Disabled Students"

    • மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
    • தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

    இது பள்ளி இறுதித்தேர்வுக்கான காலகட்டம். 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிவிட்ட நிலையில், 10 வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளன. சாதாரண மாணவர்களைப் போல மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். எனவே அவர்களுக்கு தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

     மாற்றுத்திறனாளி மாணவர்களை 18 வகையாக வகைப்படுத்தி உள்ளனர். மெல்ல கற்போர், செவித்திறன் குறைபாடு உடையோர், பார்வை திறன் குறைபாடு உடையோர், ஆட்டிசம் குறைபாடு உள்ளோர், போலியோவால் பாதிக்கப்பட்டோர், வாய் பேச முடியாதோர் போன்றவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு எழுதுவதிலும், செய்முறைத்தேர்வு எழுதுவதிலும், சில சலுகைகளையும், விலக்குகளையும் அளிக்கிறது. அவை...

     1. தேர்வு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்குவது.

    2. சொல்லுவதை எழுதுவதற்கு தனியாக ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்தல்.

    3. மொழித்தாள்களான ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றுக்கு மாணவனின் விருப்பத்தின் பேரில் விலக்கு அளித்தல்.

    4. செய்முறைத் தேர்வுகளுக்கு விலக்கு கோருதல்.

    5. தேர்வின்போது உபயோகப்படுத்தப்படும் கால்குலேட்டர், அச்சடிக்கப்பட்ட அட்டவணைகள் போன்றவற்றுக்கு அனுமதி அளித்தல்.

     6. தேர்வு எழுதுவதற்கு உதவியாளராக (ஸ்கிரைப்) தன்னுடைய தாய் அல்லது தந்தை அல்லது தனக்கு தனியாக கற்பித்த ஆசிரியரை நியமித்துக்கொள்ள உரிமை.

    7. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அவர்கள் எளிதில், தேர்வு எழுதும் அறையை அடைய சாய்தள வசதி.

    8. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தரைத்தளத்திலேயே அவர்களின் பதிவெண் வருமாறு அமைத்துக் கொடுத்தல்.

     இதுபோன்ற பல சலுகைகளை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இவற்றை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட மாற்றுத் திறன் அலுவலகத்தை அணுகி மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெற்று இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவக் குழு பரிந்துரைத்த மருத்துவச் சான்றும் பெற்றிருக்க வேண்டும். இச்சான்றுகளை வைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்டக் கல்வி அதிகாரிக்கு எழுதி அனுப்பினால் அதற்கான அனுமதி பெற்று தரப்படும்.

    பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்போ, தேர்வு நடக்கும்பொழுதோ விபத்து நடந்து எழுத முடியாத சூழல் ஏற்பட்டாலும் அந்த மாணவர், மருத்துவரின் சான்றிதழின் பேரில் தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பித்து, தான் சொல்லுவதை எழுதுகின்ற ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்து தேர்வு எழுதலாம்.

    ×